வளர்ந்து வரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவசியமாகும். அவர்களின் உடல் வளர்ச்சி, எலும்புகளின் உறுதி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளைத் திறனை மேம்படுத்துதல் என அனைத்துக்கும் பழங்கள் இன்றியமையாதவை.

வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களை குழந்தைகள் தினமும் உட்கொள்வது, அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும், அதே சமயம் அவர்கள் விரும்பிச் சாப்பிடும், அத்தியாவசிய சத்துக்களை அளிக்கும் ஏழு பழங்களும் அவை தரும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாழைப்பழம்: சாப்பிடவுடன் உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சிறந்த பழம் தான் வாழைப்பழம். இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் உறுதிக்கும் மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, குழந்தைகளின் செரிமானத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. விளையாடிவிட்டு சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது சிறந்தது.

ஆப்பிள்: ஆப்பிள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் களஞ்சியமாகும். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து, குழந்தைகளின் குடல் இயக்கத்தை சீராக்கி, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் செல்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது. தினசரி ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிடுவது, குழந்தைகளுக்குத் தேவையான பல அத்தியாவசிய சத்துக்களை எளிதாக வழங்குகிறது.

மாதுளை: மாதுளை ரத்தம் அதிகரிப்புக்கு பெயர்பெற்றது. இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால், ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. மாதுளையில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன, இவை மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதனை அதன் தன்மையில் அல்லது ஜூஸ் செய்தும் கொடுக்கலாம்.

கொய்யாப்பழம்: கொய்யாப்பழம் வைட்டமின் சி சத்தின் மிகச்சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். ஆரஞ்சுப் பழத்தை விட இதில் பல மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

பப்பாளி: பப்பாளி செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ‘பப்பாயின்’ என்ற இயற்கையான நொதி உள்ளது. இது உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. இது வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த பழமாகும். வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்குத் துணைபுரிகிறது. தொடர்ந்து பப்பாளி சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.

ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி சத்தின் முக்கிய ஆதாரங்களாகும். இந்த சத்து சளி மற்றும் காய்ச்சலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள அதிக நீர்ச்சத்து, குழந்தைகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் புளிப்பு கலந்த இனிப்புச் சுவை குழந்தைகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யின் களஞ்சியமாகும். வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வைக்கும், சருமத்திற்கும் உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் பிற தாதுக்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஆற்றலுக்கும் துணை புரிகின்றன. மாம்பழத்தின் சுவை பெரும்பாலான குழந்தைகளை எளிதில் கவரும். இந்த பழத்தை மாம்பழம் சீசனில் மட்டும் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த ஏழு பழங்களையும் குழந்தைகளின் தினசரி உணவில் தொடர்ந்து சேர்ப்பதன் மூலம், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறுதி செய்யலாம். பழங்களை அப்படியே சாப்பிடக் கொடுப்பது, அவை வழங்கும் முழுமையான நார்ச்சத்தையும் ஆரோக்கிய பலன்களையும் குழந்தைகள் பெற உதவும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version