தமிழ் சமூகத்தில், ஒரு பெண் பூப்பெய்துவது என்பது பெரும் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது. ‘பூப்புனித நீராட்டு விழா’ போன்ற சடங்குகள் மூலம், பெண் தன்மையை வரவேற்கும் அதே வேளையில், முன்கூட்டிய பருவமடைதல் (Early puberty) இளம் பெண்கள் எதிர்கொள்ளும் நிஜமான மன, சமூக சவால்களை நாம் கவனிக்க தவறுகிறோம்.

முன்கூட்டிய பருவமடைதல் என்பது பெண்களில் 8 வயதுக்கு முன்பு பருவமடைதல் ஏற்படுவதை குறிக்கிறது. சராசரி வயதிற்கு முன்னதாகவே உடல்ரீதியாக பருவமடையும் ஒரு சிறுமி, சமூகத்தின் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகளவில் ஈர்க்கிறாள். அவள் இன்னும் ஒரு சிறுமியாக இருந்தாலும், ‘வயதிற்கு வந்த பெண்’ என்ற முத்திரை காரணமாக சமூகம் அவளிடம் வயதுக்கு மீறிய ஒழுக்கத்தையும், பொறுப்புகளையும் எதிர்பார்க்கிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்று இந்திய பெண்களில் கிட்டத்தட்ட 34% பேர் 8 வயதிற்கு முன்பே பருவமடைவதற்கான அறிகுறிகளை கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. மற்றொரு ஆய்வில், கிராமப்புறங்களை விட (8.43%) நகர்ப்புறங்களில் (12.35%) இது அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது.

இந்த முரண்பாடு ஒரு சிறுமியின் மன ஆரோக்கியத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த கார்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) சமீபத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. சின்னஞ்சிறு வயதில் பருவம் அடையும் சிறுமிகள் தாங்கள் பூப்படையும் வயதைவிட, மனரீதியிலான சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என்று கடந்த 50 ஆண்டுகளாக ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.

மனச்சோர்வு, பதட்டம், ஒழுங்கீனமான நடத்தைகள் போன்ற பல சிக்கல்கள் இளமைப் பருவத்தில் கண்டறியப்பட்டன. ஆனால், இந்தக் கார்னெல் ஆய்வு, இந்த சிக்கல்கள் வயது வந்தோர் காலம் வரை (late 20s) நீடிக்கின்றனவா என்பதை கண்டறிந்தது. சுமார் 8,000 இளம் பெண்களை 14 ஆண்டுகள் (இளமைப் பருவம் முதல் 30 வயது வரை) கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முக்கிய விவரங்கள் பின்வருமாறு.

நீடித்த மனச்சோர்வு: ஆய்வில் பங்கேற்ற பெண்களில், தங்கள் சக மாணவிகளை விட சீக்கிரமாக பருவமடைந்தவர்கள், இளமை பருவத்தில் அதிக மனச்சோர்வு அறிகுறிகளை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. மிக முக்கியமாக, இவர்கள் 30 வயதை நெருங்கும்போதும், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் அதே அளவில் நீடிப்பது கண்டறியப்பட்டது.

அதாவது, முன்கூட்டியே பூப்படையும் ஒரு பெண்ணை மனச்சோர்வுக்கான ஒரு நிரந்தரமான பாதைக்கு இட்டு செல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ‘முன்கூட்டிய பருவமடைதல் என்பது வெறும் இளமைப் பருவச் சவால் அல்ல, இந்த மனநலப் பாதிப்புகள் எளிதில் கடந்துபோவதில்லை’ என்கிறார் ஆய்வாளர் ஜேன் மெண்டில்.

சமூக விரோத நடத்தை மோசமடைதல்: சாதாரணமாக, இளம் வயதினர் செய்யும் விதிகளை மீறுதல், திருடுதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் வயது ஏற ஏறக் குறையும். ஆனால், முன்கூட்டியே பூப்பெய்திய பெண்கள், இளம் பருவத்தில் ஈடுபட்ட சமூக விரோதச் செயல்கள், அவர்கள் வளர வளர மேலும் மோசமடைவதைக் காட்டியது. இந்த நடத்தை பொதுவாகப் பெண் வளரும்போது காணும் வழக்கமான மாற்றத்திற்கு நேர்மாறாக இருந்தது. இந்த நடத்தைக் கோளாறு, அந்த பெண்களுக்கு ஒரு தவறான பாதையைத் தீர்மானிக்கிறது.

ஏன் இந்தச் சிக்கல்கள் தொடர்கின்றன? ஆரம்பத்தில் பூப்பெய்தும் பெண்கள் நீண்ட கால மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள முக்கியக் காரணம், அவர்களின் உடல் தோற்றத்திற்கும் மன முதிர்ச்சிக்கும் இடையேயான பொருத்தமின்மைதான்.

முதிர்ந்த தோற்றம், குழந்தை மனம்: உடல்ரீதியாக அவர்கள் வயதில் மூத்தவர்கள் போல் தோற்றமளிப்பதால், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட அவர்களை பெரியவர்கள் போல் நடத்த ஆரம்பித்து, அதிக சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் வழங்குகிறார்கள்.

சமூக அழுத்தம்: உள்ளுக்குள் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பதால், இந்த வயதுக்கு மீறிய எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், பள்ளியில் கிண்டல், வதந்திகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகவும் வாய்ப்புள்ளது.

நட்பு சிக்கல்கள்: வேறு வேகத்தில் வளரும் நண்பர்களுடன் இவர்களால் தொடர்ந்து இணக்கமாக இருக்க முடிவதில்லை.

இந்த ஒட்டுமொத்த விளைவு அவர்களை மனரீதியாகச் சோர்வடையச் செய்து, அவர்கள் மீதான அழுத்தத்தை வளரும் வரை நீடிக்கச் செய்கிறது. எனவே, ஆரம்பத்தில் பூப்பெய்தும் பெண் குழந்தைகளுக்கு, அவர்களின் உடல் மாற்றங்களுக்கு ஏற்றவாறு மனரீதியான ஆதரவு மற்றும் புரிதல் வழங்குவது ஒரு முக்கிய பொது சுகாதார பிரச்சனை என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version