ஸ்கின் கேர் மீதான ஆர்வம் தற்போது சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகளுக்கான சோப்புகள் (Baby Soaps) மற்றும் பிற குழந்தை ஸ்கின் கேர் தயாரிப்புகளைப் இளம் வயதினர் பயன்படுத்துவது ஒரு புதிய போக்காக உருவெடுத்துள்ளது.
குழந்தைகளுக்கான சோப்புகள் மென்மையானவை என்பதால், இவை பெரியவர்களின் சருமத்திற்கும் ஏற்றதா? இதனால் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது அவசியம். இளம் வயதினர் குழந்தைகளுக்கான சோப்களைப் பயன்படுத்துவது பற்றிய விவாதத்தில், நல்லதா? கெட்டதா? என்று முடிவெடுப்பதற்கு முன், இரண்டு வகையான சோப்புகளுக்கும் இடையேயுள்ள அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
குழந்தைகளுக்கான சோப்பின் பண்புகள்: குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது, உணர்திறன் வாய்ந்தது மற்றும் வளர்ச்சி நிலையில் உள்ளது. அவர்களின் சருமத்தின் pH அளவு (அமில-கார சமநிலை) பெரியவர்களின் சருமத்தை விட சற்று வித்தியாசமாக இருக்கும்.
குழந்தைகளுக்கான சோப்புகள் பொதுவாக நடுநிலை pH-ஐ (Neutral pH) அல்லது சருமத்திற்கு இணக்கமான pH-ஐ (5.5) பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அவர்களின் மெல்லிய சருமத்தின் பாதுகாப்புத் தடையை சேதப்படுத்தாமல் இருக்க உதவுகிறது.
இவற்றில் பொதுவாக கடுமையான இரசாயனங்கள், ஆல்கஹால், செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் அதிக நுரைக்கச் செய்யும் சர்பாக்டன்ட்கள் ஆகியவை குறைவாக இருக்கும் அல்லது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் ஹைப்போஅலர்ஜெனிக் (Hypoallergenic) என லேபில் செய்யப்பட்டிருக்கும்.
பெரியவர்களின் ஸ்கின் கேர் தேவை! இளம் வயதினர்களின் சருமம் பல சவால்களை எதிர்கொள்கிறது. பெரியவர்களின் சருமம் பொதுவாக சற்று அமில pH-ஐ (4.7 முதல் 5.75) கொண்டிருக்கும். இளம் வயதில் ஹார்மோன் மாற்றங்களால் சீபம் எனப்படும் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, முகப்பரு மற்றும் எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசு, மேக்கப் மற்றும் அதிகப்படியான சீபம் போன்றவற்றை அகற்ற ஆழமான சுத்தம் தேவைப்படலாம்.
குழந்தைகளுக்கான சோப்புகளை இளம் வயதினர் பயன்படுத்தக் கூடாது! ஏன்? குழந்தைகளுக்கான சோப்புகள் பாதுகாப்பானவை மற்றும் மென்மையானவை என்றாலும், அவற்றை ஒரு பெரியவர்கள் தினசரி பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்காது, மேலும் சில விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
பலவீனமான சுத்தப்படுத்தும் திறன்: குழந்தைகளுக்கான சோப்புகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மிகக் குறைந்த சீபம் மற்றும் அழுக்கை நீக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டவை. இளம் வயதினரின் சருமத்தில் உள்ள அதிகப்படியான சீபம், இறந்த செல்கள், மேக்கப் படிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை இந்தச் சோப்புகளால் முழுமையாக நீக்க முடியாது.
இதனால், அழுக்குகள் துளைகளுக்குள் அடைபட்டு, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என Skin Cleansing without or with Compromise: Soaps and Syndets என்ற தலைப்பில் NCBI ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வுகட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
pH சமநிலையின்மைக்கு காரணமாகலாம்: பெரியவர்களின் சருமத்தின் இயற்கையான அமிலத் தன்மையைப் பராமரிப்பது மிக அவசியம். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தைகளுக்கான சோப்பில் உள்ள நடுநிலை pH, பெரியவர்களின் சருமத்தின் இயல்பான அமிலத் தன்மையைக் குறைத்து, pH சமநிலையைக் குலைக்கலாம். இதனால், சருமத்தின் பாதுகாப்புத் தடை பலவீனமடைந்து, தொற்று மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஈரப்பதம் போதுமானதாக இருக்காது: பல குழந்தை சோப்புகளில், மென்மைக்காக மாய்ஸ்சரைசிங் (Moisturizing) பண்புகள் அதிகமாக இருக்கும். இது ஏற்கனவே எண்ணெய் பசை கொண்ட இளம் வயதினரின் சருமத்திற்கு அதிகப்படியான கனமானதாக இருக்கலாம், இதனால் மேலும் துளை அடைப்புகள் ஏற்படலாம்.
பெரியவர்களுக்கு சரியான ஸ்கின் கேர் என்ன?
மென்மையான சருமத்தைப் பெற விரும்புவோர், குழந்தைகளுக்கான சோப்களைத் தவிர்த்து, பெரியவர்களின் சருமத் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட, ஆனால் மென்மையான க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம்.
- சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) அல்லது பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Peroxide) போன்ற பொருட்கள் கொண்ட முகப்பரு-எதிர்ப்பு க்ளென்சர்கள்.
- சல்பேட்-இல்லாத (Sulfate-Free), வாசனை திரவியம்-இல்லாத (Fragrance-Free) மற்றும் இலேசான (Mild) க்ளென்சர்கள்.
- சருமத்தின் pH-க்கு இணக்கமான (5.5) மற்றும் நான்-காமெடோஜெனிக் (Non-Comedogenic – துளைகளை அடைக்காத) பொருட்களை பயன்படுத்தலாம்.
