பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை விலக்கிய சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆணையை பெறுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அவரிடம் ஆணையை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை சட்டென விலக்கினார்.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இல்ஸாலிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி கூறுகையில் “இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை இந்தியாவில் உள்ள அனைவரும் உணர வேண்டும். ஒரு இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை மூத்த அரசியல் தலைவர் பலவந்தமாக அகற்றுவதும், அதனைப் பார்த்து மேடையில் இருப்பவர்கள் சிரிப்பதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிதிஷ்குமாரின் இந்த செயலானது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படுவதை சாதாரணமான விஷயமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இத்தகைய செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் கவுன்சிலும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்” என தாஹிர் ஆண்ட்ராபி கூறினார்.

இதனிடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் துறை அமைச்சர் அஸ்மா புகாரி (Azma Bokhari) தனது எக்ஸ் தள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதாவது, பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif), பெண் அதிகாரிக்கு மரியாதை செலுத்தும் வீடியோவையும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இஸ்லாமிய பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version