‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நம்முடைய முகம் நமது ஒட்டுமொத்த ஹார்மோன் ஆரோக்கியத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் நுட்பமான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை முகத்தில் தெரியும் சில அறிகுறிகள் மூலம் நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கியமான ஹார்மோன்களின் அளவு குறையும்போது, முடி, புருவம், கண், உதடுகள் மற்றும் கன்னங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நமது ஆற்றல், மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நலனையும் பேணுவதற்கு உதவும். அந்த வகையில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்தல் மற்றும் முன்நெற்றியில் முடி குறைதல்: முடி மெலிதல் அல்லது உச்சந்தலையில் முடி குறைவது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என Impact of Thyroid Dysfunction on Hair Disorders என்ற தலைப்பில் NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறையும்போது இந்த முடி பிரச்சனைகள் ஏற்படலாம் என்கிறது ஆய்வு.

புருவ முடி மெலிதல்: புருவத்தை சுற்றியுள்ள மூன்றில் ஒரு பகுதி மெலிந்து போவது, ‘ஹெர்டோக் சிக்னல்’ (Sign of Hertoghe) என்று அழைக்கப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது.

உலர்ந்த அல்லது நீர் வழியும் கண்கள்: கண்கள் அடிக்கடி வறண்டு போவது அல்லது அதிக நீர் வடிவது, சுற்றுச்சூழல் காரணங்களால் மட்டுமன்றி, டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற பாலின ஹார்மோன்களின் (Sex Hormones) குறைபாட்டாலும் இருக்கலாம் என Hormones and dry eye disease என்ற தலைப்பில் NCBI தெரியவந்துள்ளது. இந்த ஹார்மோன்கள் கண்ணீரின் சரியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன.

கண் இமை முடிகள் உதிர்தல்: கண் இமை முடிகள் மெலிந்து உதிர்வது, தைராய்டு பிரச்சனைகள் அல்லது வயதாவதால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டைக் குறிக்கிறது.

உதடுகளில் கோடுகள் மற்றும் வறட்சி: உதடுகளைச் சுற்றி கோடுகள் தோன்றுவதும், உதடுகள் வறண்டு போவதும் மெனோபாஸ் (Menopause) காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைவதைக் குறிக்கும் பொதுவான அறிகுறிகளாகும். இந்த ஹார்மோன்களின் குறைவால் உதடுகள் அதன் ஈரப்பதத்தை இழக்கின்றன.

தாடையில் முடி வளர்தல்: பெண்களுக்கு வயதாகும்போது தாடைக்குக் கீழே முடி தோன்றுவது இயல்பு தான். இருப்பினும் இளம் வயதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் குறையும்போது ஆண்ட்ரோஜன் செயல்பாடு அதிகரிப்பதன் காரணமாக பெண்களுக்கு.

முகப் பொலிவு குறைதல்: முகத்தின் தோல் பொலிவின்றி (வெளிர் நிறமாக) காணப்படுவது தைராய்டு செயல்பாட்டில் உள்ள குறைபாட்டைக் குறிக்கலாம். அதேபோல், கன்னங்கள் தொங்குவது DHEA, டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டினால் ஏற்படலாம்.

வறண்ட சருமம்: முகத் தோல் வறண்டு, சுருங்கி அல்லது வீங்கியது போல் தோன்றுவது நீரிழப்பு மற்றும் தாது உப்புகளின் (Mineral Deficiency) குறைபாட்டினால் மட்டுமல்லாமல், அட்ரினல் சுரப்பி செயல்பாட்டைப் பாதிக்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளையும் குறிக்கலாம். முகத்தில் தெரியும் இந்த அறிகுறிகளை கவனமாகக் கண்காணிப்பதன் மூலம், ஹார்மோன் சமநிலையின்மையை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version