சமையல் சீக்கிரம் முடிய வேண்டும், ஆனால் சுவையாகவும் இருக்க வேண்டுமா? உங்களுக்காகப் பயனுள்ள மற்றும் அசத்தலான 20 சமையல் குறிப்புகள். படித்து தெரிந்து மறக்காமல் உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க!
- சிக்கன் குழம்பு செய்யும் போது, இறுதியில் கொஞ்சமாக தேங்காயையும் சோம்பையும் அரைத்துச் சேர்த்து, குழம்பு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்தால் குழம்பு கெட்டியாகவும் கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
- காய்ந்த ஆரஞ்சு தோலை டீ தூளில் வைத்தால் டீ கூடுதல் ருசியுடனும் மணத்துடனும் இருக்கும்.
- ஒரு கப் இட்லி மாவில், அரை கப் ஊறவைத்து அரைத்த ஓட்ஸ் மாவுடன் கலந்தால் இட்லி சாஃப்டாக வரும்.
- எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிடுவதற்கு பதிலாக, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை ருசியாக இருக்கும்.
- துவரம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து வேகவைத்தால் சீக்கிரமே பருப்பு வெந்து வரும்.
- தோசைக்கல்லில் சப்பாத்தி செய்த பிறகு, எண்ணெய் தடவி வைத்துவிட்டால் தோசை ஊற்றும் போது ஒட்டாமல் வரும்.
- பேக்கிங் சோடாவை டூத் பேஸ்டில் கலந்து டீ வடிகட்டியைத் தேய்த்தால் நீண்ட நாட்களாகப் படிந்திருந்த கரை நீங்கும்.
- கறிவேப்பிலையையும் வெந்தயத்தையும் வறுத்து பொடி செய்து இறுதியாகப் புளிக்குழம்பில் சேர்த்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
- எந்த வெரைட்டி ரைஸ் செய்வதாக இருந்தாலும், தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- அடுப்பில் எண்ணெய் கறை அல்லது பிசுபிசுப்பாக இருந்தால், வாழைப்பழத் தோலை வைத்து தேய்த்தப் பின் ஈரத்துணியை வைத்துத் துடைத்தால் எண்ணெய் பசை நீங்கும்.
- கோதுமை மாவு அரைக்கும் போது, வெள்ளை கொண்டைக்கடலையையும் சேர்த்து அரைத்தால் மாவு சத்தானதாக இருக்கும்.
- எந்தப் பருப்பு வடை செய்வதாக இருந்தாலும், அதில் இஞ்சியைத் துருவிச் சேர்த்தால் வாயு, அஜீரணத் தொல்லை நீங்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
- முட்டையை குக்கரில் வைத்து 3 விசில் விட்டால் சீக்கிரமாகவே முட்டை வெந்துவிடும்.
- தயிருக்கு பதில், காய்ச்சி ஆறவைத்த பாலைச் சிக்கனில் சேர்த்து ஊறவைத்தால் சிக்கன் சாஃப்டாகவும் ஜூஸியாகவும் இருக்கும்.
- உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் டிஷ் வாஷிங் லிக்விட்டைச் சேர்த்துப் பாத்திரம் கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
- புதினா சட்னி அரைக்கும் போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வறுத்து சேர்த்து அரைத்தால் ருசியும் சத்தும் கூடும்.
- எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் கிராம்பைச் சொருகி வீட்டின் மூலைகளில் வைத்தால் பூச்சி வராது.
- துவரம் பருப்புடன் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்துச் சாம்பார் செய்தால் சுவை கூடும்.
- குழம்பு அல்லது கிரேவியில் உப்பு அதிகமாகிவிட்டால், தேங்காயைச் சின்னச் சின்னதாக நறுக்கிச் சேர்க்கலாம் அல்லது தயிர் சேர்க்கலாம்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தண்ணீரில் வேக வைக்காமல் ஆவியில் வேக வைத்தால் தான் அதன் இயற்கையான இனிப்புச் சுவை மாறாது
