காய்ச்சல் வந்துவிட்டால் போதும், நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் அறிவுரை குளிக்கக்கூடாது என்பது தான். காய்ச்சல் எத்தனை நாள் இருக்கிறதோ அத்தனை நாட்களும் குளிக்காமல் இருந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். ஆனால், இப்படி பல நாள் குளிக்காமல் இருப்பதே புத்துணர்ச்சியற்று, தெளிவு இல்லாமல் சோர்வாக இருக்க முக்கிய காரணமாகும்.

இப்படியிருக்க, காய்ச்சலின் போது குளிக்க கூடாது என எதற்காக சொல்கிறார்கள் என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? இது உண்மையில் ஆபத்தானதா? இப்படி நாம் சிறுவயதில் இருந்து பழகிய பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காய்ச்சலின்போது குளிக்கக் கூடாது என்ற நம்பிக்கை தவறான புரிதலில் இருந்து வந்தது. அந்தக் காலக்கட்டத்தில், மக்கள் பொதுவாகவே குளிர்ந்த நீரைத்தான் பயன்படுத்தினர். அதிக காய்ச்சலுடன் இருக்கும் ஒரு நபர் குளிர்ச்சியான நீரில் குளிக்கும்போது, உடலின் வெப்பநிலை திடீரென வேகமாகக் குறையும்.

இந்த விரைவான வெப்பநிலை மாற்றம் உடலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, தன்னிச்சையாக நடுக்கத்தைத் (Shivering/Chills) தூண்டும் என Ways to reduce fever: are luke-warm water baths still indicated? என்ற தலைப்பில் வெளியான NCBI ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் நடுக்கம் என்பது, உடலின் வெப்பநிலையை மீண்டும் உயர்த்துவதற்காக தசைகள் வேகவேகமாக செயல்படும் ஒரு இயற்கையான எதிர்வினை ஆகும். இதன் விளைவாக, குளிர்ந்த நீரில் குளிப்பது காய்ச்சலை குறைப்பதற்குப் பதிலாக, உடலின் ஆற்றலை மேலும் செலவு செய்து, காய்ச்சலைத் தீவிரப்படுத்தவோ அல்லது நோயாளிக்கு அதிக அசௌகரியத்தை ஏற்படுத்தவோ வாய்ப்பிருந்தது.

எனவே, குளிர்ந்த நீர் உண்மையில் காய்ச்சலை மோசமாக்கியதால், காய்ச்சலின்போது குளிக்கக் கூடாது என்ற பொதுவான விதியாக அது நிலைத்துவிட்டது. மேலும், குளித்த பிறகு முறையாகத் துடைக்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் குளிர்ச்சியும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று கருதினர்.

உண்மையில் காய்ச்சல் வந்தால் குளிக்கலாமா?

உண்மை என்னவென்றால், காய்ச்சலின்போது குளிப்பது ஆபத்தானது அல்ல. மாறாக, சில சமயங்களில் மிகவும் நன்மை பயக்கும். காய்ச்சல் என்பது உடலின் இயல்பான பாதுகாப்பு நடவடிக்கையே. அப்போது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் வரும் உடல் வலி, தலைவலி, சோர்வு மற்றும் வெப்ப உணர்வு ஆகியவை மிகவும் வேதனையாக இருக்கும். இந்த நிலையில், நீங்கள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து, மிதமான அல்லது இளஞ்சூடான நீரைப் பயன்படுத்தலாம்.

மிதமான நீரில் குளிப்பது அல்லது துடைத்துக்கொள்வது (Sponge Bath) உடலின் வெப்பநிலையை மெதுவாகக் குறைத்து, தசைகளில் உள்ள வலியைப் போக்கி, புத்துணர்ச்சி அளிக்கும். இது காய்ச்சலால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைத்து, நன்றாகத் தூங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. குளிப்பது உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், உடலில் உள்ள கிருமிகளைக் கழுவி, சுகாதாரத்தைப் பேணவும் உதவுகிறது.

இதில் கூடுதல் கவனமும் தேவை!

  • குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் மேலே குறிப்பிட்டது போல உடலை நடுங்கச் செய்து, வெப்பநிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
  • அதே சமயம், நீர் மிகவும் சூடாகவும் இருக்கக் கூடாது. அது உடல் வெப்பநிலையை மேலும் உயர்த்திவிடும். எனவே, மிதமான நீர் மட்டுமே சிறந்தது.
  • மேலும், குளித்து முடித்தவுடன் தலை மற்றும் உடல் முழுவதையும் உடனடியாகத் துடைத்து, கதகதப்பான ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு மிகவும் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், நின்று குளிப்பதற்குப் பதிலாக, மிதமான நீரில் ஒரு துணியை நனைத்து, அக்குள், கழுத்து மற்றும் நெற்றி போன்ற இடங்களில் துடைத்துக்கொள்வது (ஸ்பாஞ்ச் பாத்) நல்லது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version