காலம் மாறும்போது நம் பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில், குடும்பத்தினர் அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்தினர். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் நினைக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

உள் மற்றும் வெளிப்புற ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தீவிரமாக அதிகரித்திருப்பதால், குளியல் பொருட்கள் விஷயத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்திற்குள்ளேயே ஒவ்வொருவரும் தங்களது சரும வகைக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் தனித்தனி சோப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தனிப்பட்ட தேர்வுகளின் அடுத்த கட்டமாக, சிலர் பாடி வாஷ் (Body Wash) அல்லது ஷவர் ஜெல் (Shower Gel) பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர். சோப்புப் பயன்பாடு சுகாதாரமற்றது அல்லது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல என்று கருதுவதே இந்த மாற்றத்திற்குக் காரணம். உண்மையில், இந்த இரண்டு பொருட்களும் எவ்வாறு வேறுபடுகின்றன, மேலும் சரும ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

சோப் vs. பாடி வாஷ்: சோப்பு மற்றும் பாடி வாஷ் இரண்டுமே அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கிருமிகளை சருமத்திலிருந்து நீக்கும் அடிப்படை நோக்கத்தைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் மூலப்பொருட்களும், அவற்றின் செயல்பாட்டு வழிமுறையும் வேறுபடுகின்றன.

சோப்: சோப்புகள் பொதுவாக உயர்ந்த அமிலத்தன்மை (Higher pH level) கொண்டவை, அதாவது pH அளவு சராசரியாக 9-10 வரை இருக்கிறது. இந்த உயர் pH அளவு சிலரது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம், ஏனெனில் இது சருமத்தின் இயற்கையான அமிலத் தன்மையைப் (சருமத்தின் pH அளவு சுமார் 5.5) பாதிக்க வாய்ப்புள்ளது என Evaluation of pH of Bathing Soaps and Shampoos for Skin and Hair Care என்ற தலைப்பில் NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தையும் எண்ணெய்களையும் நீக்குவதால், வறண்ட, உணர்திறன் மிக்க சருமம் மற்றும் எக்ஸிமா, சொரியாசிஸ் போன்ற நாள்பட்ட சருமப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது இல்லை என்கிறது. அதனால், நீங்கள் பயன்படுத்தும் சோப்பில் உள்ள pH அளவை தெரிந்து கொள்வது அவசியம்.

பாடி வாஷ்:

பாடி வாஷ்கள் பொதுவாக சருமத்தின் இயற்கையான pH அளவோடு ஒத்த அல்லது அதற்கு நெருக்கமான pH அளவை (சராசரியாக 5.5-7) கொண்டவை. இதனால் இவை சருமத்தில் மென்மையாகச் செயல்படுகின்றன. இதன் விளைவாக சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.

இவை பெரும்பாலும் கிளிசரின், செராமைடுகள் மற்றும் இயற்கையான எண்ணெய்கள் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. வறண்ட சருமம் மற்றும் நாள்பட்ட சருமப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சரும மருத்துவர்கள் பாடி வாஷ்களையே அதிகம் பரிந்துரைக்கின்றனர்.

இரண்டில் எது சிறந்தது? இறுதியில், சோப்பை தேர்ந்தெடுப்பதா அல்லது பாடி வாஷைத தேர்ந்தெடுப்பதா என்பது தனிப்பட்ட சரும வகை மற்றும் தேவையைப் பொறுத்தது. உலர், உணர்திறன் சருமம் உள்ளவர்கள், ஈரப்பதம் மற்றும் pH சமநிலையைப் பாதுகாக்கும் பாடி வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது நல்லது. எண்ணெய் பசை அல்லது சாதாரண சருமம் உள்ளவர்கள், சோப்பைப் பயன்படுத்தலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version