‘புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் முட்டைகள்’ என்ற தலைப்பில் யூ-ட்யூபில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை முடிவுகள், இணையவாசிகளை கலங்கடித்துள்ளது. அந்த வீடியோவின்படி, உயர்தர மற்றும் 100% ஆண்டிபயாடிக் இல்லாதது என்று விளம்பரப்படுத்தப்படும் எக்கோஸ் நியூட்ரிஷியன் (Ecko’s Nutrition) முட்டைகளில், தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயைத் தூண்டும் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சர்ச்சைக்கான தொடக்கமாக இருந்தது டிரஸ்டிஃபைடு (Trustified) என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு வீடியோ. தங்கள் யூட்யூப் சேனலில் பரிசோதிக்கப்பட்ட முட்டை மாதிரிகளில் AOZ எனப்படும் நைட்ரோஃபுரான் என்ற தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக்கின் மாற்றுப் பக்கவிளைவு இருப்பதாக அந்த யூ-ட்யூபர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அளவு பில்லியனுக்கு 0.73 பாகங்கள் மட்டுமே என்றாலும், தயாரிப்பு ‘100% ஆண்டிபயாடிக் இல்லாதது’ என்று விளம்பரப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டால் இது நுகர்வோரிடையே நம்பிக்கை சார்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முட்டைகளிலுள்ள நைட்ரோஃபுரான் மற்றும் நைட்ரோஇமிடசோல் போன்ற மரபணு நச்சுத்தன்மை கொண்ட இரு வேதிப்பொருள்கள் டிஎன்ஏ-வை பாதிக்கக்கூடும் என்றும், அதனால் புற்றுநோய் அபாயம் உயரும் என்றும் யூடியூபர் கூறியுள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பிய நிலையில், மருத்துவ நிபுணர்கள் பலரும் தாமாக முன்வந்து இதுபற்றி தெளிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மனன் வோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நானும் இவ்வகை முட்டைகளை பயன்படுத்தி உள்ளேன். இந்த தகவல்கள் எனக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” எனக்கூறி உள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், மக்கள் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். தனது வீடியோவில் அவர், “இந்தப் பொருட்கள் மரபணு நச்சுத்தன்மை கொண்டவை என்று தெரியும். ஆனால், பெரிய அளவில் உட்கொள்ளப்பட்டால் மட்டுமே டிஎன்ஏ மாற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
தற்போது கண்டறியப்பட்ட அளவு மிகச் சிறியது. இதை புற்றுநோய் வருவதற்குக் காரணமாகும் என்று நேரடியாகக் கூற முடியாது” என்று விளக்கினார். அத்துடன், இந்த விவகாரத்தில் பார்வையிட வேண்டியது, FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்) எனும் உணவு ஒழுங்குமுறை அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version