இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஐந்து நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தின் முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து பின்னர் நெதர்லாந்து சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், சனிக்கிழமை மாலை தி ஹேக் நகரில் நெதர்லாந்து பிரதமர் ரோப் ஜெட்டனுடனை சந்தித்து பேசினார்.
அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள், கடல்சார் மேம்பாடு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் பிரதமர் மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ரோப் ஜெட்டன் ஆகியோர் விரிவாக ஆலோசித்தனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தும் 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா- நெதர்லாந்து உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வரலாற்று ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதால், நெதர்லாந்து இந்தியாவின் முக்கிய கூட்டாளியாகும் என்றார்.
இருதலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மேற்காசிய நிலவரம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக குறிப்பிடப்பட்டது. மேற்காசியப் போரால், மனிதத் துயரங்கள் மட்டுமின்றி உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக செயல்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உலகின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் நெதர்லாந்தின் ஆப்ஸ்லூயிட்டிக் அணையை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த அணை 32 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்டமான வெள்ளத்தடுப்பு அணையாகும்.
நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி ஸ்வீடன் சென்றடைந்தார். கோதன்பர்க் நகர விமானநிலையத்தில் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். ஸ்வீடனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

