தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, திருவண்ணாமலையில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும். திருப்பதியில் செய்யப்பட்டு உள்ளது போன்று திருவண்ணாமலையிலும் ஏர்போர்ட் வசதி செய்ய வேண்டும். இதற்கான பணியை விரைந்து தொடங்க வேண்டும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை உயர்ந்து வருவது ஒருபுறம் என்றால், மாணவர்களிடம் மது மற்றும் கஞ்சா பழக்கவழக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலை ஏற்பட திமுக அரசு தான் முக்கிய காரணம். இது வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்கள், இதுவரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், பல மத்திய அரசு திட்டங்களை, மாநில அரசு திட்டங்களாக மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய நாடு நம்முடைய பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். அனைத்து திட்டங்களிலும் இந்தியா முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. பிரதமர் மோடி பொறுப்பு ஏற்கும் போது பொருளாதாரத்தில் 13-வது இடத்தில் இருந்த இந்தியாவை தற்போது 4-வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளார். மற்ற நாடுகளுக்கு உதவும் நாடாக இந்தியா மாறியுள்ளது. பீகாரில் கிடைத்த வெற்றி பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசிய அவர், “வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் 6 முதல் 8 இடங்கள் கேட்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, திருவண்ணாமலை அல்லது கீழ்பென்னாத்தூர் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது ஆண்டவன் கையில் தான் உள்ளது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version