தேசியக் கட்சியான பாஜக கூட புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து, பி டீமை உருவாக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாரம்பரியமாக அங்கே அரசியல் செய்து வரும் அதிமுக-வின் நிலைதான் அந்தோ பரிதாபமாக மாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த புதுச்சேரி அதிமுக, 10 இடங்களில் போட்டியிட்டு ஐந்தில் வென்றது. அப்போது அந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனக்குத் தேவையான 15 இடங்கள் கிடைத்துவிட்டதால் ரங்கசாமி தந்திரமாக அதிமுக-வை கழற்றி விட்டார். இதனால் அப்போது ஜெயலலிதா ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். இதனால் அடுத்த தேர்தலில் தனித்தே களம் கண்ட அதிமுக, 4 இடங்களைப் பிடித்தது.

கடந்த முறை, ரங்கசாமியையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. இந்தத் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என தமிழகத்தை போலவே முடிவெடுத்த புதுச்சேரி அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

இப்படி மாறி மாறி சூடுபட்டுக் கொண்டதால் இப்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்பி இருக்கிறது அதிமுக. ஆனால், இப்போது கூட்டணி வலுவாக இருந்தாலும் அதிமுக தனது சுய பலத்தை இழந்து வருகிறது. காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ-வான அசனா கட்சியிலிருந்து விலகி இருந்தார். அண்மையில் அவர் தவெக-வில் இணைந்தார். நேற்று, முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கரும் அதிமுக-வில் இருந்து விலகி இருக்கிறார். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகனின் தம்பி என்பது முக்கியமான விஷயம்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அதிமுக-வினர், “கடந்த 2021-ல், போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களி​லும் நாங்கள் தோற்றாலும் என்டிஏ வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை ரங்கசாமி அரசு எங்களுக்குக் கொடுக்கவில்லை. வாரி​யத் தலை​வர், நியமன எம்​எல்ஏ பதவி உள்ளிட்டவற்றில் கூட எங்களை பரிசீலிக்கவில்லை.

இந்த நிலையில், இம்முறை எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. கடந்த முறை போட்டியிட்ட வர்களில் மாநிலச் செயலாளராக அன்பழகன் உள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ-வான ஓம்சக்தி சேகர் ஓபிஎஸ் அணியில் இருக்கிறார். இன்னொரு முன்னாள் எம்எல்ஏ-வான வையாபுரி மணிகண்டன் தனித்து செயல்படுகிறார். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் இருப்பதால் கடந்த முறை கிடைத்த எண்ணிக்கையிலாவது எங்களுக்கு சீட் கிடைக்குமா என்று தெரியவில்லை.

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, பல தொகுதிகளிலும் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் அரசியல் கட்சியாக உருமாற இருக்கும் சேவை அமைப்புகள் உள்ளிட் டோருடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நடுவில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் வரிசையாக விலகி தங்களுக்குத் தெரிந்த வழிகளைத் தேடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், கரைந்து கொண்டிருக்கும் கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version