டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திய நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே தொடங்கிய கருத்து மோதல் கட்சியில் இருவருக்கும் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அண்மையில் அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இந்த சூழலில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதேநேரம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் இருந்து ஒருவருக்கு பின் ஒருவராக வெளியே வந்தனர்.
டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வரும் அதேநேரத்தில் இங்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவில் செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமியும் போர்க்கொடி தூக்கி இருக்கும் சூழலில் யார் பக்கம் செல்வது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.