தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேநேரம் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அந்த பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்தல் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.