கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு திமுக தான் காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டினர். இதேபோல் தவெகவின் மீது பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்ட 4பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த சசி என்ற சசிகுமார், தவெகவை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த டேவிட், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புகாரை விசாரித்த நீதிபதி 4பேரையும் வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயர சம்பவம் குறித்தோ அல்லது நீதிபதிகள் குறித்தோ அவதூறு கருத்து கூறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக பேர் மீது ஏற்கெனவே 25 சமூக வலைதளங்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்ட நிலையில் தற்போது 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.