வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வராண்டை வரும் 15 ம் தேதி செயல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் 2007-2009 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் விசாரணையில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதனால் அமைச்சர் துரைமுருகன், அவரின் மனைவி ஆகியோரை நேரில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராகாத நிலையில் அவரின் மனைவி சாந்தகுமாரி மட்டும் நேரில் ஆஜராகி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக் கொண்டு சாந்தகுமாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை திரும்ப பெற்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டை அமல்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version