மீன்பிடி துறைமுகங்களை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மீனவர்களின் சுதந்திரத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சியின்மாநிலத் தலைவர் முகமது முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கீழ் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சென்னை – காசிமேடு தொடங்கி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களும், நூற்றுக்கணக்கான மீன்பிடி இறங்கு தளங்களும் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை உருவாகும்.

விமான நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பொதுத்துறை பெருநிறுவனங்களுக்குரிய கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை மீன்பிடி துறைமுகங்களில் திணிப்பது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது.

நள்ளிரவிலும் அதிகாலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் படகுகளும் வந்து செல்லும் ஒரு சுறுசுறுப்பான பணியிடமே இத்துறைமுகங்கள் ஆகும்.

இங்கு பயோமெட்ரிக் கண்காணிப்பு, ஸ்மார்ட் அடையாள அட்டை, கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில், சொந்த மண்ணிலேயே மீனவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஒரு உளவுப் பிரதேசமாக மாற்றும் முயற்சி நடக்கிறது.

துறைமுகத்திற்கு வரும் சாதாரண தொழிலாளர்களிடம் துப்பாக்கி ஏந்திய மத்தியப் படையினர் காட்டக்கூடிய அணுகுமுறை, பெரிய அளவிலான மோதல்களுக்கும் அச்ச உணர்வுடன் கூடிய சூழலுக்கும் வழிவகுக்கும்.

இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளும் சோதனைகளும் மீன் வணிகத்தின் வேகத்தைக் குறைப்பதோடு; மீனவர்கள், சுமை தூக்குவோர், வியாபாரிகள் மற்றும் ஐஸ் ஃபேக்டரி ஊழியர்கள் சுதந்திரமாக வேலை செய்யும் சூழலை முடக்கி, அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். மேலும், இந்த இ-பாதுகாப்புக்கான பெரும் தொகையை ‘துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணமாக’ (Harbour User Fee) தொழிலாளர்களிடமிருந்தே வசூலிக்க வாய்ப்புள்ளது, இது ஏற்கனவே நலிவடைந்துள்ள மீன்பிடித் துறையை மேலும் வீழ்த்தும்.

காலங்காலமாக எவ்வித தடையுமின்றி கடலுக்குச் சென்று வரும் நம் பாரம்பரிய மீனவ குடும்பங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலாளிகள் போல சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மூலம் கட்டுப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சாதாரண மனிதர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் துறைமுகங்களை, ‘மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக’ (Strategic Zones) அறிவித்து, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான சதி முயற்சியே இதற்குப் பின்னால் உள்ளது.

எல்லையோரக் கடலில் இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே அன்றாடம் இன்னல்களுக்கு உள்ளாகும் நம் மீனவர்களுக்கு, உள்நாட்டிலேயே மத்திய பாதுகாப்புப் படைகள் மூலம் புதிய நெருக்கடியை உருவாக்குவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.. மாநிலத்தின் உரிமையைக் காக்கவும், லட்சக்கணக்கான தமிழக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இத்திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

மீனவ சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில், ஒட்டுமொத்த மீனவ அமைப்புகளுடனும், கடலோர மக்களுடனும் எஸ்டிபிஐ கட்சி எப்போதும் தோளோடு தோள் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version