புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்விக்கு திமுகதான் காரணம் என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வைத்திலிங்கம் எம்.பி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்திய அரசு மாணவர் சமுதாயத்திலே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
பல்வேறு குளறுபடிகளை செய்து சி.பி.எஸ் தேர்வு முறையை குழப்பி உள்ளனர். சிபிஎஸ்சி நிர்வாக முறையே தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. இதன் மூலம் குளறுபடிகளை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீட் தேர்வில் என்றும் பல்வேறு குளறுபடிகள் தொடர்கிறது.
இந்த குளறுபடிகளை மாணவர்களே கண்டுபிடித்து வெளிப்படுத்தி உள்ளனர். பிரதமர் இதற்கான எந்த ஒரு காரணத்தையும் சொல்லவில்லை.
இந்த நிர்வாக சீர்கேடுகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு பின்பற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலைப் பள்ளியில் மூன்றாவது மொழியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புதுச்சேரி மானவர்களின் விரும்பும் மொழியாக இருந்த பிரெஞ்சு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி கண்டு கொள்ளவில்லை. இவரை கண்டிக்கும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுவைக்கு 15,000 கோடி தந்துள்ளோம் எனக்கூறி உள்ளார். ஆனாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி வருகிறார்.
மத்திய அரசு தந்த 15 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் ரங்கசாமி விளக்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியின் சர்வாதிகாரப் போக்கிற்கு அமைச்சரவையோ. சட்டமன்றமும் தேவையில்லை. அவர் ஒருவர் மட்டுமே அரசு நிர்வாகத்தை நடத்துவார்.
புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். விஜய் கட்சியான தவெகவை திமுக குறைவாக மதிப்பிட்டதுதான் தோல்விக்கு காரணம்.
நாங்கள் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் இனி நாங்கள் போட்டியிட மாட்டோம். புதுவையில் கூட்டணிக்கு திமுகதான் தலைமை தாங்கியது. அதனால் தோல்விக்கு திமுகவே காரணம்.
தட்டாஞ்சாவடியில் தவெக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். தட்டாஞ்சாவடி தொகுதி முதல் அமைச்சர் தொகுதி என வாக்களித்தனர். ஆனால் அந்த தொகுதியை முதல் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். அந்த தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

