நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார்.
மோடி ஆட்சியில் நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
அவரது சமூகவலைத்தளப் பதிவில்,
நுழைவுத் தேர்வு என்ற பெயரில் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை பாசிச மோடி அரசு சிதைத்து வருவதாகவும்,
எந்தவொரு தேர்வாக இருந்தாலும், அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சியில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலையும், பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் பூதமாக நுழைவுத் தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் திறனை கண்டறிவதற்குப் பதிலாக, சமூக, பொருளாதார ரீதியாக. பிந்தங்கிய மாணர்களை கல்வியில் வெளியேற்றும் கருவியாக நுழைவுத் தேர்வை மோடி அரசு பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள மாணிக்கம் தாகூர்,
நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதில் மோடி அரசு செய்த குளறுபடிகளால், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் மறுதேர்வு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது எனச் சாடியுள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவம் பார்க்க தகுதித் தேர்வு எழுத வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வை, ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம்”(NBEMS) நடத்துகிறது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நீண்ட கேள்விகள், வீடியோ அடிப்படையிலான கேள்விகள், மருத்துவ செயல்முறை சார்ந்த கேள்விகள் என, தேர்வு முறையில் பெரும் மாற்றங்களை NBEMS புகுத்தியதால், தேர்ச்சி விகிதம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 12.78 சதவிகிதமாக குறைந்துள்ளது., 36,280 பேர் தேர்வு எழுதயதில், 4,635 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறியுள்ள மாணிக்கம் தாகூர்,
வீடியோ அடிப்படையிலான கேள்விகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களுக்கு தேர்வர்கள் தயாராக போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். ஆனால், தேர்வு நாளன்று விதிமுறைகளை மாற்றியுள்ளனர். இது மோடி அரசின் மேட்டுக்குடி, பண்ணையார் மனநிலையை காட்டுகிறது. கடன் வாங்கி வெளிநாட்டில் மருத்துவம் படித்த நம் பிள்ளைகளை, மருத்துவம் பார்க்க விடாமல் தடுப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை உடனடியாக ஒரு வெளிப்படையான மறுஆய்வை மேற்கொண்டு, இத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வரம்பை (Cut Off) குறைக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், மோடி அரசால் அநீதி இழைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடும் என நம்பிக்கை அளித்துள்ளார்.
