பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உகந்ததாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு கடந்த 6ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், எழுத்துப்பூர்வமாக கருத்துகளை வழங்குமாறு அரசின் சார்பில் கட்சிகளிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில், தலைமைச் செயலாளரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக கடிதத்தை வழங்கினோம்” என்றார்.

தொடர்ந்து, “பொதுக்கூட்டம், பரப்புரைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை தமிழக அரசு ஏற்கக்கூடாது. அந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனு அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டியதுதான் அரசின் முதற்கட்ட நடவடிக்கை. அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கூட்டம் கூடும் உரிமை, கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு இத்தகைய நெறிமுறைகள் விரோதமாக உள்ளது.

ஏற்கனவே காவல் சட்டங்கள் மூலம் பொதுக்கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் உள்ளன. அதனை பயன்படுத்திதான் காவல்துறை அனுமதி மறுப்பு, நேரக்கட்டுப்பாடு போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதற்கு மேலாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்குவது தேவையற்றது. அரசியல் சாசனத்துக்கு முரணான எந்த விதிமுறைகளையும் அரசு அல்லது நீதிமன்றம் விதிக்க முடியாது.
கூட்டங்கள் நடத்த ரூ.20 லட்சம் வரை காப்புத்தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது. குற்றம் முன்கூட்டியே நடைபெறும் என்ற கணிப்பில் டெபாசிட் கேட்கப்படுவது சிறிய அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகளின் அரசியல் பங்கேற்பை தடுக்க செய்யப்படும் நடவடிக்கை. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது ஏற்க முடியாது.

திடீர் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க 10 முதல் 30 நாட்கள் முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்ற நிபந்தனை ஜனநாயகத்திற்கு எதிரானது. போராட்டம் நடைபெறும் இடத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. போராட்ட இடத்தை நிர்ணயிக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து SIR குறித்து பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் பதிவேட்டுப் படிவங்கள் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை. இணையவழி பதிவு செய்யும் முறைகள் பொதுமக்களுக்கு சரியாக புரியவில்லை. Blo அலுவலர்களுக்கே போதுமான பயிற்சி இல்லாததால் நிலைமை சிக்கலானதாக உள்ளது. மேலும், அவர்கள் மிகுந்த பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதால், இந்த பணியை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version