காரைக்குடி, வேளச்சேரி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதாகவும், அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் அனல் பறக்கின்றன. இப்படியிருக்கையில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த வதந்திகள் பூகம்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன.
விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பு ஆர்வம் காட்டினாலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விஜய்யுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தால், ப. சிதம்பரம் தனது பழைய ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ போல் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகின்றன.
காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது நிலவும் உட்கட்சி மோதல்கள் மற்றும் கோஷ்டி பூசல்கள், கட்சி மீண்டும் ஒருமுறை உடையப்போவதை உறுதி செய்வது போலவே இருக்கின்றன. செல்வப்பெருந்தகை தலைமையிலான ஒரு அணி திமுகவை கூட்டாளியாக’ பார்த்தாலும், திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படாவிட்டாலோ அல்லது அதிகாரம் பகிரப்படாவிட்டாலோ கட்சி உடைய வாய்ப்பு அதிகம். இது நடந்தால், காங்கிரஸில் இருந்து ஒரு அணியினர் பிரிந்து செல்லும் வாய்ப்புகளே அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், தொகுதி பங்கீட்டிலும் திமுக – காங்கிரஸ் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, காரைக்குடி, வேளச்சேரி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுகிறது என திமுகவுக்கு ரிப்போர்ட் பறந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களமிறக்க ஆலோசனை நடந்து வருவதாகவும், இதனால் கதர் சட்டைக்காரர்கள் கடுப்பில் இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஏற்கனவே,கூட்டணியில் நிலவும் சலசலப்பு மேலும் பூதாகரமாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
