இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் இணைந்து நீதிபதி சுவாமிநாதனை நீக்கக்கோரி கையெழுத்திட்ட தீர்மானம் நீதித்துறையை அசைத்துப்பார்ப்பதற்கு சமம் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மலை உச்சில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், உச்சி பிள்ளையார் கோயில் தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய, சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அதிகாரி சந்திரசேகர், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீபம் ஏற்றக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன். மேலும் அன்றே தீபம் ஏற்றவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் அன்றும் தீபம் ஏற்றப்படாததால், மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி ராமகிருஷ்ணன் அமர்வு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். இதனிடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று வழங்கினார். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரானா பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், இந்த மனுவில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திடுள்ளனர்.
மக்களவையில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வர 100 எம்.பிக்கள் கையெழுத்தும், மாநிலங்களவையில் 50 எம்.பிக்கள் கையெழுத்தும் தேவைப்படும். கடந்த சில நாட்களாக திமுக எம்.பிக்கள், ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸுக்காக பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களிடம் கையெழுத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது வெட்கக்கேடானது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘இந்தியா கூட்டணியின் தலைமையான காங்கிரஸ், அவசரச் சட்டம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள்.
இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடிப்பேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் “கறுப்பர் கூட்டங்களைத்” தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது.
ஆக, ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச அறிவாலயம் அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடி தான்! அதனால்தான் இப்போது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள் விரோத கும்பல்!
இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயலாகும். இதை தேசிய ஜனநாயக் கூட்டணி முறியடிக்கும்.’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
