என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் 3000 பேருக்கு மாமல்லபுரத்தில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 100 வாக்காளர்களுக்கு ஒரு திமுக நிர்வாகி என்ற அடிப்படையில் 6 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 68 ஆயிரம் வாக்கு சாவடிகளையும் வெல்வதே இலக்கு என்றும் பயிற்சிக் கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம்! உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்கணும்! அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்!
2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களையும், மகத்தான வெற்றிகளை பெற்று வர்றோம்! நம்மோட வெற்றிகள், நம்ம எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு! 2026 தேர்தல்லயும் நாமதான் வெற்றிபெற போறோம்… அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா – “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” இதுதான் ஹெட்லைன்ஸ்! இதை நான் ஆணவத்துல சொல்லல! உங்க உழைப்பு மேலயும் – ஆட்சியின் சாதனைகள் மேலயும் – தமிழ்நாட்டு மக்கள் மேலயும் வெச்சிருக்க நம்பிக்கைல சொல்றேன்!
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் ஏற்படுத்துன சுயமரியாதை உணர்வாலதான், பாஜகவோட பாசிச ஆட்சிக்கு அடிபணியாம, முதுகெலும்போட எதிர்த்து நிக்குறோம்! எதிர்த்து நிக்குறது மட்டுமில்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வெச்சது மாதிரியான பல போராட்டங்கள்ல வெற்றியும் பெற்றிருக்கோம்! இப்போ கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஏழு மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைச்சோம்! அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டுல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம்! இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம்ம மேல கோபம் வருது. அதுனாலதான், பல்வேறு சூழ்ச்சிகள்ல அவங்க ஈடுபடுறாங்க!
இந்த நிலைமையிலதான் அடுத்தகட்டமாக நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன – அதை எப்படியெல்லாம் செய்யணும், தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்கோட செயல்படணும்னு விவாதிச்சு, அதை களத்துல செயல்படுத்துறதுக்காக தான் – இந்த பயிற்சிக் கூட்டம்” என்று பேசினார்.
