அதிமுகவினர் அடுத்த 9 நாட்களுக்கு தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே வராமல், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை (SIR) கவனமுடன் செய்ய வேண்டும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), அதிமுகவினருக்கு கிடைத்த வரம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தற்போது எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எஸ்ஐஆர்-க்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
சிறுபான்மையினர் மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்களின் வாக்குகளை திட்டமிட்டு நீக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6.19 கோடி பேருக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 59 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை பூர்ததி செய்து கொடுக்க டிசம்பர் 4 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொளி காட்சி மூலமாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் எஸ்ஐஆர் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நமக்கு கிடைத்த வரம் என்பதை யாரும் மறக்கக் கூடாது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இப்பணியை அனைத்து மாவட்ட செயலாளர்களும் துல்லியமாக, சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மீதமுள்ள 9 நாட்களும், மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லாமல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கவனமாக செய்ய வேண்டும். இறந்தவர்கள், குடி பெயர்ந்தவர்களை நீக்கி துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக அயராது உழைக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
