வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் ஒற்றைத் தலைமையின் கீழ் சந்திக்கப்போகும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டாலும், அப்போது கட்சியின் உட்சபட்ச அதிகாரம் அவரது முழு கட்டுப்பாட்டில் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்த இரட்டை தலைமையின் கீழ் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 2021 தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 75 இடங்களில் வென்றது.
அதிமுக மட்டும் 66 தொகுதிகளில் வென்று பலம் வாய்ந்த பிரதான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்ந்தது. கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போன சூழலில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக நிலைநிற்க முக்கிய பங்காற்றியது கொங்கு மண்டலம்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் தான் கொங்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் மொத்தம் 67 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் உள்ள 67 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 43 இடங்களில் கைப்பற்றியது. திமுக கூட்டணிக்கு வெறும் 24 தொகுதிகளில் தான் வெற்றி கிடைத்தன.
2026 தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்கவேண்டும் என்ற முனைப்பில் பழனிசாமி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். அதன் ஒருப் பகுதியாக புதுமுக வேட்பாளர்களை களமிறக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2026ல் குறைநணநது 175 இடங்களில் அதிமுக போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளாராம். குறிப்பாக மூத்த தலைவருக்கு விரும்பும் தொகுடியில் சீட் கொடுத்து சமரசம் செய்யும் அவர், தனக்கு விசுவாசிகளாக இருக்கும் சுமார் 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால் எம்.எல்.ஏ. க்கள் விலை போய்விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
