சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் அதிமுக – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார். இந்தச் சந்திப்பில் 2026 தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்தும், கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். வரும் மாதங்களில் எப்படி செயல்படுவது, ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவது எப்படி என்பது பற்றியும் ஆலோசித்தோம்.

ஊழல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள், இளைஞர், மீனவர்கள், வணிகர், விவசாயிகள் ஆகியோரின் நலனை மேம்படுத்தும் ஆட்சியை 2026-ல் அமைப்போம். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்தச் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது” என்றார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீண்ட இளைவெளிக்குப் பிறகு பியூஷ் கோயலை சந்தித்தது மகிழ்ச்சி. இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். 2026 தேர்தலில் அதிமுக, பாஜக, தேஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற கருத்தை பரிமாறிக்கொண்டோம்.

திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் கொந்தளிப்போடு உள்ளார்கள். 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஒருங்கிணைந்து ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version