அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரங்களில் வேண்டுமென்றே கவனத்தை திசைதிருப்பும் வகையில் நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை கூட்டத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால், அதில் ஓட்டுநரே நோயாளியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி 10 மாதங்களுக்கு முன்னதாகவே பிரசார பயணத்தை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி உள்ளது. கடந்த மாதம் கோவையில் இந்த பயணத்தை தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து ஆளும் திமுக அரசின் அவலங்களை பேசி வருகிறார்.

அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டிருந்த அந்த வேளையில், ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கூட்டத்திற்கு இடையே புகுந்தது. சைரன் ஒலியோடு அந்த வாகனம் வந்தபோது அதிமுக தொண்டர்கள் வழிவிட்டனர்.

அப்போது பிரசார வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சந்தேகம் வரவே, அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உள்ளே நோயாளி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினார். ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு சோதனையிட்டு பார்த்தபோது உள்ளே நோயாளி என யாருமில்லாதது தெரியவந்தது.

இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, ஆளில்லாத ஆம்புலன்சை அனுப்பி அதிமுக பிரசாரத்தை இடையூறு விளைவிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். எவ்வளவு கேவலமான அரசியல் செய்றாங்க என்று ஆதங்கப்பட்டார். அடுத்தமுறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால், அதன் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார் என எச்சரிக்கையும் விடுத்தார்.

நோயாளி என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டு உதவுவது தமிழர்களின் பண்பு. அதிமுக தொண்டர்களின் குணமும் அதுதான். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசும் எல்லா கூட்டங்களிலும் ஏதேனும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி அவர் பேச்சுக்கு தடைபோடுவதும், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதும் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version