செங்கோட்டையன் விவகாரத்தில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பிறகு முக்கிய நகர்வாக அமைந்து வருவது செங்கோட்டைஒய்யனின் தொகுதியிலேயே எடப்பாடி பழனிசாமி பேசிய வார்த்தைகள், அதற்கு செங்கோட்டையன் கொடுத்து வரும் பதில்கள் ஆகியவை தான். அந்த வகையில் தற்போது செங்கோட்டையன் கூறியிருப்பதையும், கோபிச்செட்டிப்பாளையத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்று பேசியதன் பின்னணியில் உள்ள கணக்குகளையும் பார்க்கலாம்.

சமீபத்தில் தனது “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணத்தின் அடுத்தகட்ட தொடக்கத்தை கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து துவங்கினார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததோடு மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் வைத்தது அடுத்து கோபிச்செட்டிப்பாளையத்திலேயே அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென திட்டமிட்டு தனது பயணத்தை அங்கிருந்து தொடங்கினார். அங்கு மக்களிடையே பேசிய அவர், “இங்கிருந்த எம்.எல்.ஏ ஒருவர் மனம் திறந்த பேசுவதாக கூறி தலைமைக்கே காலக்கெடு வைத்தார், தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இதனால் பதவியை பறித்தோம், அதற்கு பிறகும் திருந்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் திருந்தவில்லை. பசும்பொன் விழாவின் போது, கட்சியில் நீக்கப்பட்டவர்களோடு தொடர்பு வைத்ததால் அவர் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் அதனால் தான் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம். அவரைப்போல் நான் சுயநலவாதி அல்ல. அதிமுகவின் தொண்டன். கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான். இப்போது வேறு கட்சியில் உள்ளார். எங்கிருந்தாலும் வாழ்க. வரும் 2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம்” என பேசியிருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து குறித்து கோவையில் பேசிய செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல; அதனால் அவருக்குப் பதில் கூற வேண்டிய அவசியமும் இல்லை” எனக்கூறி சென்றார். இருப்பினும் மீனம்பாக்கம் விமான நிலையில் சற்று விரிவாக பேசிய செங்கோட்டையன், “கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோரோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பேசியிருக்கிறேன் என சொல்ல முடியாது. 5 ஆம் தேதிக்கு பிறகு தான் அவர்களிடத்தில் தொடர்பு வைத்து பேசினேன் தவிர வேறொன்றுமில்லை. வேண்டுமென்றே குற்றச்சட்டு சொல்லி என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பது அவரது நீண்ட நாள் ஆசை. இப்போது அவர் ஆசை நிறைவேறியிருக்கிறது” என கூறினார்.

செங்கோட்டையனின் கட்சி மாற்றத்திற்கு பின்பாக கோபிச்செட்டிப்பாளையம் கவனிக்கப்படும் தொகுதியாகவே மாறியுள்ளது. காரணம் செங்கோட்டையனின் கோட்டையான கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுகவின் வாக்குகள் சரியும்; தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு தொகுதியில் இப்போதே வெற்றி உறுதி; இவர்கள் பிரச்சனையில் திமுகவின் ரூட் கிளியராகிவிட்டது” என்றெல்லாம் அவரவர் கட்சிக்கு சாதகமான கருத்துக்களை பரப்பி வந்தனர். இவற்றை ஆட்டம் காண வைக்கும் வகையில், தனது பிரச்சாரத்தை நிகழ்த்தி காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. “செங்கோட்டையனுக்கான வாக்கு வங்கி என்பது மிக மிக சொற்பமே; அதிமுகவின் இரட்டை இல்லை தான் அவருக்கே செல்வாக்கை கொடுத்தது. அது இல்லாமல் அவர் ஒன்றுமில்லை” என்பதை காட்டவே கோபிச்செட்டிபாளையத்தில் உடனடி பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டார விவரமறிந்தோர். கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த பிரச்ஹசாரே கூட்டத்திற்காக வெளியே உள்ளே என மொத்தமாக சுமார் 20,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இது செங்கோட்டையனை சற்றே நடுங்க வைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதுபோக, திரைமறைவில் நடக்கும் நிகழ்வாக, செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்த 12 நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணியை இபிஎஸ் கையில் எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் செங்கோட்டையனை தவெகவுக்குள்ளும் ஆதரவற்றவராக்கிவிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

மேலும், ‘செங்கோட்டையனின் நடவடிக்கை தனது தலைமை பதவிக்கு செங்கோட்டையன் விடுத்துள்ள சவால்’ என்கிற அடிப்படையில், எடப்பாடி தொகுதியில் பழனிசாமி எந்த அளவிற்கு கவனம் செலுத்துவாரோ, அதே அளவிற்கு கோபிச்செட்டிப்பாளையத்திலும் கவனம் செலுத்துவார். அதற்கான சிக்னல் தான், “சேலத்தை விட முன்னேறிய பகுதியாக கோபிச்செட்டிபாளையத்தை மாற்றுவேன்” என அவர் சூளுரைத்ததன் அர்த்தம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆக, மொத்தத்தில் செங்கோட்டையன் தொடங்கிய ஆட்டத்தில் இ.பி.எஸ் சிக்ஸர் விளாச சூடுபிடிக்கிறது கோபிச்செட்டிப்பாளையம் களம்…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version