ஜெ. ஜெயலலிதா… தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ஆளுமை… யாருக்கும் அஞ்சாத தைரியமும், எடுக்கும் முடிவில் சற்றும் பிறழாத உறுதியும் கொண்ட தலைவராக இருந்தவர். அவர் இல்லாமல் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன ஆனாலும், அரசியல் உலகில் ஜெயலிலதா எனும் பெயர் தினமும் ஒலிக்காமல் இல்லை. என்னற்ற திட்டங்களை மக்களுக்காக கொண்டு நிறைவேற்றிய மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவு தினமான இன்று 9ம் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்..
பிறப்பு
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வேதவல்லி – ஜெயராமன் ஆகியோருக்கு முதல் குழந்தையாக ஜெயக்குமாரும், இரண்டாவது குழந்தையாக ஜெயலலிதாவும் (இயற்பெயர் கோமளவல்லி) மைசூரில் பிறந்தனர். ஜெயலலிதாவிற்கு இரண்டு வயது இருக்கும் போதே அவருடைய தந்தை காலமானார். ஜெயராமன் உயிரிழந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் தனது பெற்றோர் ஊரான பெங்களூருவுக்கு குழந்தைகளுடன் குடியேறினார்.
படிப்பு
ஜெயலலிதா பெங்களூருவில் குடியேறிய பிறகு அங்குள்ள Bishop Cotton Girls School பள்ளியில் படிப்பை துவக்கி 4 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர், ஜெயலலிதாவின் தாய் வேதவள்ளிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வேதவள்ளி எனும் பெயரை சந்தியா எனவும் அவர் மாற்றிக்கொண்டார். இதையடுத்து சென்னை வந்த ஜெயலலிதா Sacred Heart Matriculation School, Church Park பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடங்கினார்.
படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்த ஜெயலலிதா படிக்கும் போதே பரத நாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை கற்றார். தன்னுடைய 12வது வயதில் தனது பரத நாட்டிய கலையையும் அரங்கேற்றம் செய்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர்ந்த ஜெயலலிதா பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். ஜெயலலிதாவின் தாய்க்கு சினிமா துறை பெரிதாக உதவவில்லை, அதனால் பொருளாதார நெருக்கடியில் தவித்த அவரது தாய் சந்தியா, தனது மகளை சினிமா துறைக்கு கொண்டு வர நினைத்தார்.
இதன் காரணமாக, தனக்கு பெரிதாக சினமா துறையில் விருப்பம் இல்லையென்றாலும், கல்லூரி படிப்பை நிறுத்தி சினிமா துறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

திரைத்துறை
சினிமாவில் நுழைந்த ஜெயலலிதா 1961 ஆம் ஆண்டு சிறிசைல மகாத்மி என்ற கன்னடத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறார். தொடர்ந்து அதே ஆண்டு எபிஸில் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக, மேன்-மனுஷி, சின்னட கோம்பே, மனே அலியா ஆகிய கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து 1965 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் உடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் ஜெயலலிதாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பிறகு கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து திரைத்துறையில் உச்சத்திற்கு சென்றார்.
1966 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மோட்டார் சுந்தரம்பிள்ளை, அதே ஆண்டில் ஜெய்சங்கர் உடன் யார் நீ?, கௌரி கல்யாணம், ரவிசந்திரன் உடன் குமரிப்பெண், எம்.ஜி. ஆர் உடன் சந்திரோதயம், தனிப் பிறவி, முகராசி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தவிர, தாய்க்குத் தலைமகன், அரச கட்டளை, காவல்காரன், ரகசிய போலீஸ் 115, தேர்த் திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், நம் நாடு, அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, அன்னம்மிட்ட கை உள்ளிட்ட வெற்றி படங்களில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ஜெயலலிதா நடித்திருந்தார்.
இதில், 1973 ஆம் ஆண்டு பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படம் எம்.ஜி. ஆர் உடன் ஜெயலலிதா இணைந்து நடித்த கடைசி திரைப்படம் ஆகும். எம்.ஜி.ஆருடன் அதிகமான திரைப்படங்களில் நடித்த நடிகை என ஜெயலலிதா பெயர் பெற்ற நிலையில் பெரும் உச்சத்திற்கு சென்று வெகுஜன மக்களையும் கவர்ந்தார். மேலும், ஜெயலலிதா, எம்ஜிஆர் இணைந்து நடித்த திரைப்படங்கள் எல்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த காலகட்டத்தில் உச்ச நடிகர்களான ஜெய் சங்கர், ரவிசந்திரன், ஜெமினி கனேசன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஸ்ரீகாந்த் ஆகிய நடிகர்களுடன் ஜெயலலிதா இணைந்து நடித்திருந்தார். இந்தியில் தர்மேந்திரா உடன் 1968 ஆம் இஜத் என்ற படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். 1980 ஆம் ஆண்டில் ஜெயலலிதா நடித்த கடைசி திரைப்படம் நதியை தேடி வந்த கடல் ஆகும். இதில் கதாநாயகனாக சரத்பாபு நடித்திருப்பார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மட்டுமின்றி ஆங்கிலம் மொழியிலும் ஜெயலலிதா நடித்துள்ளார். அந்த வகையில், ஜெயலலிதா 1961 ஆண்டு முதல் 1980 வரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தாயின் மரணம்
தன்னுடைய இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதாவை அரவணைத்து வழிகாட்டியாக துணை நின்றது தாய் சந்தியா தான். திரைத்துறைக்கு வர விருப்பம் இல்லாமல் இருந்தாலும் தாயின் முடிவை ஏற்று திரைத்துறைக்கு வந்த ஜெயலலிதாவிற்கு கூடவே இருந்து அவர் கவனித்துக்கொண்டார். இந்நிலையில், 1971 ஆண்டு அக்டோபர் மாதம் தாய் சந்தியா உயிரிழந்தார். தந்தையும் இல்லாமல், தாயும் இல்லாமல் தவித்து போய் நின்றார் ஜெயலலிதா.
அரசியல் பயணம்
எம்.ஜி.ஆர் உடன் அதிகமான திரைப்படங்கள் நடித்திருந்த ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 1983 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வான ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்றத்தில் 185 வது இருக்கை ஒதுக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அஇஅதிமுக ஜெயலலிதா தலைமையிலும், எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி தலைமையிலும் இரண்டாக பிரிந்தது.
இதைதொடர்ந்து 1989 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி சேவல் சின்னத்திலும், ஜானகி தலைமையிலான அணி இரட்டை புறா சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணி 27 இடங்களிலும், ஜானகி தலைமையிலான அணி 2 இடத்திலும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற, ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜானகி தோல்வியை தழுவினார்.
இதையடுத்து ஜானகி அரசியலிருந்து விலகினார். பிரிந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒன்றினைத்து இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றி, கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் முதல் பெண் எதிர்கட்சி தலைவராக ஜெயலலிதா உருவானார். 1989 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போது, சட்டசபையில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா, ” சட்டசபைக்குள் இனி முதலமைச்சராக தான் வருவேன்” என உறுதி எடுத்தார்.
இதன் பிறகு தமிழ்நாட்டில் 1991ம் ஆண்டு திமுக அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் நடைப்பெற்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழ்நாடு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபையில் சொன்ன உறுதியை நிறைவேற்றினார்.
2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் டான்ஸி வழக்கு தீர்ப்பு காரணமாக, தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியவில்லை. இருப்பினும் அதிமுக வெற்றி பெற்றவுடன் முதல்வராக பதவியேற்றார். ஆனால் இதில் தலையிட்ட நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது இதையடுத்து அவர் பதவி விலகினார்.
1991-1996 ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதான டான்ஸி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியதன் காரணமாக அவரால் முதல்வராக தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் குற்றம் நிருபிக்கப்படவில்லை என ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை செல்லாது என தீர்ப்பு அளித்தன. இதையடுத்து 2002 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா.
தொடர்ந்து 2006 இல் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டும் வென்று பெரும் தோல்வியை அடைந்தது. அந்த தேர்தலில் திமுகவும், 96 இடங்களில் மட்டும்தான் வென்றது, பெரும்பாண்மையுடன் வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பில் தான் ஆட்சி நடத்தியது. அப்போது தான் ஜெயலலிதா திமுக அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்று விமர்சிக்க தொடங்கினார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். ஆனால் 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை மற்றும் 100 கோடி அபராதம் விதித்தது.
இதன் காரணமாக 2014 ஆண்டு தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து மேல்முறையீடு செய்ததன் காரணமாக, 2015 ஆண்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ச்சியான வெற்றியின் மூலம் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
தோல்விகள்
1991 பர்கூர் வெற்றியை தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு மீண்டும் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது தான் முதல் முறையாக ஜெயலலிதா தோல்வியைத் தழுவினார்.
சாதனைகள்
பெண் சிசுக் கொலையைத் தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தினார். தண்ணீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் துவக்கினார். நாட்டிலேயே அம்மா உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அம்மா மருந்தகம் மூலம் குறைவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டது.
பாலூட்டும் தாய்மார்கள் பல நேரங்களில் பொது இடங்களில் குழந்தைகளின் பசியாற்ற முடியாத நிலையை கருத்தில் கொண்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாலூட்டும் தனி அறை துவக்கப்பட்டது. தாலிக்கு தங்கம் என்ற திட்டம் மூலம் ஏழை எளிய குடும்பங்களில் திருமணங்களுக்கு தங்கம் வழங்கப்பட்டது. பெண்களுக்காக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதித்தது. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக 9 வது அட்டவணையில் சேர்த்தார். அதனால் ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று ஜெயலலிதா கொண்டாடப்பட்டார்.
காலம் கடந்தும் நினைவில் நிற்கும் இதுபோன்ற மக்கள் நலன் திட்டங்களாலும், தனித்துவமான ஆளுமையாலும் தனது கோடிக்கணக்கான தொண்டர்களாலும், மக்களாலும் ”அம்மா” என்று ஜெயலலிதா அழைக்கப்பட்டார்.
இறுதி காலம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துக்கொண்ட கடைசி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி அன்று நடைபெற்றது. அதன் பின்னர் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா காணொலி வாயிலாக சென்னை மெட்ரோ திட்டத்தை திறந்து வைத்தார். இதுவே அவர் பொது வெளியில் தோன்றி கலந்துகொண்ட கடைசி அரசு நிகழ்ச்சியாகும்.
ஜெயலலிதாவின் முழு உருவ புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)
செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் மருத்துவமனை வாசலில் குவிந்து பிராத்தனைகளில் ஈடுபட்டனர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டது ஆனால், 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இதய அடைப்பு காரணமாக 2016 ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்த அதிமுகவை ஜெயலலிதா ஒன்றினைத்தார் ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இது ஜெயலலிதா என்கிற ஆளுமையின் வெற்றிடத்தையே உணர்த்துகிறது. எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் ஒற்றை முகமாக இருந்து வந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு கட்சி எத்தனை பிரிவுகளாக பிளந்தாலும், கடைக்கோடி தொண்டனையும், அதிமுகவையும் இணைப்பது ”அம்மா” என்கிற ஆளுமை தான்.
