காரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு மாநகராட்சி சிறப்பு கூட்டத்தை கூட்ட உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியைச் அதிமுக கவுன்சிலர் ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
“நான் காரைக்குடி மாநகராட்சியின் 22 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருக்கிறேன்.
காரைக்குடி மாநகராட்சியினல் 36 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு கவுன்சிலர் ராஜினாமா செய்து விட்டதால் 35 கவுன்சிலர்கள் காரைக்குடி நகராட்சியில் உள்ளனர். அவர்களின் 23 கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளோம். காரைக்குடி மாநகராட்சியின் மேயரின் தகுதியின்மை, பொதுமக்களின் திருப்தின்மை, கடமைகளைச் செய்ய தவறுதல் ஆகிய காரணங்களால் கவுன்சிலர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
ஆகவே மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான கூட்டமும் கூட்டப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது. கவுன்சிலர்கள் மனு அளித்த 30 நாட்களுக்குள்ளாக மாநகராட்சி ஆணையர் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆனால் காரைக்குடி நகராட்சியில் ஆணையர் கூட்டத்தைக் கூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே காரைக்குடி நகராட்சியின் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவது (ரகசிய வாக்கெடுப்பு மூலம்) தொடர்பாக சிறப்பு கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி அளித்துள்ள உத்தரவில், மனுதாரர் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள புகார் மனுவின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளாட்சி விதிகளுக்கு உட்பட்டு ரகசிய வாக்கெடுப்பு மூலம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.