திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பது தொடர்பான வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவில்கள் மிகவும் பழமையானவை, பிரசித்தி பெற்றவை. தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி சுப்பையா என்பவர் தனது வருமானத்தில் 8ல் ஒரு பங்கை தூத்துக்குடி சித்தி விநாயகர் கோவிலுக்கும், மற்றொரு பங்கை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மடம் கட்டுவதற்கும் என வழங்கியுள்ளார்.
அதோடு கோவிலின் பெயரில் ஏராளமான சொத்துக்களையும் வாங்கியுள்ளார் “சுப்பையா தர்ம நிதி டிரஸ்ட்” எனும் பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் தொடங்கி 1934 ஆம் ஆண்டிலேயே 28,540 ரூபாயை அந்த கணக்கில் வரவு வைத்து, சொத்து மற்றும் கணக்கில் உள்ள தொகை மற்றும் அதன் வட்டியை கோவிலில் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹரி சுப்பையாவால் கோவிலுக்கென வாங்கப்பட்ட ஏராளமான சொத்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே “சுப்பையா தர்மநிதி டிரஸ்ட்-டிற்கு சொந்தமான சொத்துக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.