கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கொங்கு ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சராக முதல் முறையாக மக்களை சந்தித்து ஜோசப் விஜய், பேசியிருக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன சொல்லப் போகிறார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
அவருடைய பேச்சுக்களில் முதலமைச்சராக எதார்த்தத்தை எதிர்பார்க்கிறோம். அந்த உரைக்குப் பின்பு நாங்கள் வைக்கும் ஆலோசனை, முதலமைச்சர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக சீர்கேடு புரையோடி போய்விட்டால் திரும்ப தமிழ்நாட்டை மீட்க முடியாது.
விரைவில் துவங்க இருக்கின்ற சட்டசபை கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால் அமைச்சர் சபையை தாமதமின்றி கூட்டி ஆலோசிக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பல திறமையான அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள் ஆனால் அதை திறமையாக செய்யக்கூடிய பல அதிகாரிகள் இன்னும் உங்கள் ஆட்சி வட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள்.
விவசாய கடன் தள்ளுபடி இப்போது அறிவிக்காமலேயே இருந்திருக்கலாம். இன்னும் ஆறு மாதம் கழித்து கூட செய்திருக்கலாம். ஆதரவாக இருந்த விவசாயிகளை இவ்வளவு விரைவாக அரசுக்கு எதிராக திருப்பியிருக்க வேண்டாம். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு திருச்சியில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் உங்களுடைய உரை விவசாயிகளுக்கு ஆறுதலாக இல்லை. இப்போது அறிவித்த கடன் தள்ளுபடியை ரத்து செய்து விட்டு கால அவகாசம் எடுத்து விவசாயிகளுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் வேதனை அடைந்துள்ளார்கள். அதை திறம்பட கையாண்ட அதே அதிகாரிகள் தான் இன்னும் இருக்கிறார்கள். அதிகாரத்தால் மட்டுமே அதிகாரிகளிடம் வேலை வாங்கி விட முடியாது. அதிகாரிகள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வை காண வேண்டும்.
டெண்டர்களில் லஞ்சம் இல்லாமல் ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம். உத்தரவு மட்டுமே அதை சாதித்து விடாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் விலை பட்டியலில் 15 சதவீதம் குறைக்க வேண்டும். இதை செய்தால் எந்த ஒரு ஒப்பந்தக்காரர்களும் லஞ்சம் கொடுக்க முன்வர மாட்டார்கள்.
வீடுகள் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் லஞ்சம் இல்லாமல் நடக்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம். அறிவிப்பு மட்டுமே அதை சாதிக்காது. வீடு கட்டுவோர் விதிப்படிதான் கட்ட முடியும் என்ற உணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். அதை கண்காணிக்கின்ற பொறியாளர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.
மணல், கல்குவாரி விஷயங்களில் அனுமதியை தாண்டி எடுக்கக் கூடாது என்ற கனிம வளம் காக்கக்கூடிய கண்டிப்பான உத்தரவை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் கட்டுமானங்களுக்கு தேவையான மணல், ஜல்லி தட்டுப்பாடு வந்து விடக்கூடாது. மிக கவனமாக இதை கையாள வேண்டும்.
பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு இருக்கின்ற மதுபான கடைகளை மூடும் அறிவிப்பை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் வேலை இழந்த டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். டாஸ்மார்க் ஊழியர்களின் சம்பளம், கடை வாடகை, உடையும் பாட்டில்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை கோரி இருக்கின்ற ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டும். மனமகிழ் மன்றங்களில் அளவில்லாத மது பிரியர்கள் வரிசை கட்டி நிற்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதை அறிவிக்கும் பொழுது தமிழ்நாடு முழுவதும் பல தலைமுறைகளாக இயக்கிக் கொண்டிருக்கின்ற தனியார் பேருந்து நிறுத்தப்படுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்ற நடைமுறையை தனியார் பேருந்துக்கும் அமல்படுத்தினால் தான் பெண்களுக்கு வசதியாக இருக்கும். கட்டணத்திற்கான தொகையை அரசு பேருந்து நிறுவனத்திற்கு திருப்பித் தருவது போலவே தனியார் பேருந்து நிறுவனத்திற்கும் திருப்பி தந்தால் தான் நடைமுறை சாத்தியமாக மாறும்.
திருச்சியில் பேசும் பொழுது கோட் அணிவதை பற்றி நம்மைப் போல சாமானியர்கள் கோட் அணிய கூடாதா என்று கேட்டீர்கள். எல்லா சாமானியனுக்கும் தாங்களும் தனி விமானத்தில் முதலமைச்சரை போல பயணிக்க முடியுமா என்ற அந்த ஏக்க பெருமூச்சு தங்களுக்கு எட்டவில்லையா.?
