அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் மாஃபா பாண்டியராஜன் மும்பைக்கு சென்றதால், அவர் தவெகவில் இணையக்கூடும் என தகவல் பரவி வருகிறது.

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளதால், பெரும் பரப்பரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், கொள்கை பரப்பு மாநில இணைச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வராதது பெரும் பேசுபொருளாகி உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்காத மாஃபா

முன்னதாக, அ.தி.மு.க-வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல அணிகளாக பிரிந்துள்ளதால், கட்சியை ஒன்றினைக்க வேண்டும் என கூறிய செங்கோட்டையன், சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்த பிறகு, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, செங்கோட்டையன் தனது சட்டபேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க-வில் இணைந்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வில் இன்னும் பலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மாஃபா பாண்டியராஜன் தரப்பும் அதிருப்தியில் இருப்பதால் தான் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர் விரைவில் த.வெ.க-வில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில செயலாளருமான பொன்னையன், “பொதுக்குழு நன்றாக நடந்தது. அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாஃபா பாண்டியராஜன் வரவில்லை என்றால் அவருக்கு ஏதாவது காரணம் இருக்கும். யார் ஒருவர் வரவில்லை என்றாலும் தலைமைக்கு தகவல் சொல்லிவிடுவார்கள்,” என்றார்.

மாஃபாவின் மும்பை பயணம்

தவெக-விற்கு மாஃபா பாண்டியராஜன் செல்ல உள்ளதாக தகவல் பரவுகிறதே என்ற கேள்விக்கு, மாஃபா பாண்டியராஜன் அவ்வளவு தாழ்ந்து போகமாட்டார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய இந்த கேள்விகளுக்கு விடையை தேடி, மாஃபா பாண்டியராஜன் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், தான் மும்பையில் ஒரு பணிக்காக வந்திருப்பதாகவும், தலைமைக்கு இந்த செய்தி தெரியும் எனவும், வேறு காரணங்கள் ஏதும் இல்லை. சென்னை வந்த பிறகு அவர்களை பார்பேன் என்றும் கூறினார்.

அ.தி.மு.க பொதுக்குழு-செயற்குழு கூட்டம்

இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் தற்காலிக அவைத் தலைவராக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல் நிலை சரியில்லாததால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமியை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.

இந்த கூட்டத்தில்,

  • எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட கூட்டணிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை தாங்குகிறது.
  • இந்த கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.
  • தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்தும் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் இருந்து வருவது வேதனை அளிக்கிறது.
  • காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம்

உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version