வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது தொடர்பான கேள்விக்கு, யானைகள் – விலங்குகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜம் தான், உரிய இழப்பீடு தருகிறோம் என்ற அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு யானை முகாம்களை சேர்ந்த 4 யானை பாகன்களுக்கும் 11 பயிற்சியாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகள் பராமரிப்பு மையத்தில் சிறப்பு பயிற்சியளிக்கபட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்து திரும்பியவர்களை சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் சந்தித்து வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த அவர் உயிரியல் பூங்காவில் உள்ள தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய போராட்டங்கள் நடத்த தேவையில்லை என்றும், அனைவரையும் நிரந்தரம் செய்ய முடியாவிட்டாலும், அரசு நிதி நிலை மற்றும் பணியாளர் தேவையை பொறுத்து தேவையானவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தரம் செய்யபடுவார்கள் என்றும் தேர்தலுக்குள் இந்த பிரச்சனைகள் சரி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.
அப்போது வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு யானைகள் – விலங்குகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது சகஜம் தான், உரிய இழப்பீடு தருகிறோம் அமைச்சர் ராஜகண்ணப்பன் அலட்சியமாக பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.