தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்திற்கு அதிக அளவில் மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. 2014-15 நிதியாண்டு மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது மற்ற 5 பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது, சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது மத்திய அரசு. இதில் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் தலா 0.2% க்கும் குறைவாகவும் பெற்றுள்ளன. சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது, தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” எனத் தெரிவித்துள்ளார்.