பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியும் இம்மாத இறுதியில் தமிழாட்டிற்கு வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேசிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி இம்மாதம் 28-ம் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர், தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய இரட்டை என்ஜின் வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் டப்பா என் ஜின் ஆட்சி இங்கு எடுபடாது எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வரும் 28-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலான கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். அதேப் போல மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், ராகுல்காந்தி பேச்சுவார்த்தைக்காக வருகிறாரா? அல்லது பிரசாரத்திற்காக வருகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒரே நேரத்தில் மத்தியில் எதிர் எதிர் அணியில் உள்ள தலைவர்கள் தமிழ்நாடு வருகை தருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
