எதிர்க்கட்சிகள் எல்லாம் எஸ்ஐஆரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க அலுப்பில்லாமல் மக்களுக்கு அரசாங்கப் பணத்தை திட்டம் என்ற பெயரில் எடுத்துக் கொடுத்து பிஹாரில் ஆட்சியை தக்கவைத்திருக்கிறது நிதிஷ் – பாஜக கூட்டணி.

பிரதமர் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சுமார் 75 லட்சம் மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதே பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்ததற்கும் ஆளும் கூட்டணி அமோக வெற்றி கண்டதற்கும் காரணி என்கிறார்கள்.

இதே ஃபார்முலாவை தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வேறு ரூட்டில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் பாஜக கூட்டணி விவாதித்துக் கொண்டிருக்கிறது.

இதை சமாளிக்கும் விதமாக தமிழகத்தில் ஆளும் திமுக-வும் கஜானா பணத்தை தேர்தல் களத்தில் இறக்கி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். பிஹார் லெவலுக்கு ’வாரி வழங்க’ இங்கே கஜானா ’வெயிட்டாக’ இல்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயை ‘போனஸாக’ தரலாமா என்று ஆளும் தரப்பில் ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆகவேண்டும் என்ற திட்டத்தில் இம்முறை எந்த எல்லைக்கும் போகும். மத்திய அரசின் மூலமாக கோடிகளை அதிகாரப்பூர்வமாகவே தேர்தல் களத்தில் இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதை சமாளிக்கும் விதமாகத்தான் தமிழக அரசும் இம்முறை பொங்கலுக்கு ’பரிசு’ கொடுக்கும் திட்டம் குறித்து பரிசீலிப்பதாக தெரிகிறது. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

அதனால், தேர்தல் சமயத்தில் திமுக அரசு கொடுக்கும் ‘போனஸுக்கும்’ நல்ல ரிசல்ட் கிடைக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே பிஹாரில் இப்படியான திட்டத்தை பாஜக கூட்டணி செயல்படுத்தி முன்னேரை ஓட்டி விட்டதால் இங்கே பொங்கல் போனஸ் கொடுத்தால் பாஜக கூட்டணியால் அதை எதிர்த்து எதுவும் பேசவும் முடியாது” என்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version