“கூட்டணி அமைப்பதற்கு முன் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என லேசாக கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவுக்கு சொன்னதை செய்யச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறாராம். அது என்ன வாக்குறுதி? என்ன அழுத்தம்? பார்க்கலாம்.
2026 அதிமுகவுக்கு ஒருவகையில் வாழ்வா? சாவா? என்பதான தேர்தல் தான் என அரசியல் வட்டார பேச்சுக்கள் பரபரக்க, தன்னுடையதா தலைமையிலான அதிமுக ஒரு மிகப்பெரும் வெற்றியாக இந்த 2026 தேர்தலை வென்றே ஆக வேண்டும் என முழு முனைப்போடு அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பம்பரமாய் சுழன்று வருகிறார். அந்த வகையில், பாஜவுடனான கூட்டணி அதிமுகவுக்கு பெரும் சாதகமாக இருக்க வேண்டும் என கணக்கு போட்ட எடப்பாடியார், டெல்லி நகர்வுகள் மூலம் தமிழ்நாட்டில் திமுகவை சரிகட்ட வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு சில அசைன்மெண்ட்டுகளை கோரிக்கைகளாக வலுயுறுத்தியே கூட்டணியை முடிவு செய்தார். ஆனால், அவர் கேட்டுக்கொண்டதை பாஜக இன்று வரை சொன்னபடி செய்து கொடுக்கவில்லை என அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடியார்.
அதாவது, தமிழகத்தில் வலிமையாக இருக்கும் திமுக கூட்டணியில் சேதம் விளைந்து பலவீனம் அடைந்தால் தான் அவர்களை வீழ்த்த முடியும். இந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் திமுக அமைச்சர்கள் வகை தொகையின்றி கொள்ளையடித்துள்ளனர். அதில் ஓரிரு அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டாலும் அவையெல்லாம் பெரிய தாக்கங்கங்களை திமுகவுக்கு கொடுத்தது போல தெரியவில்லை. அதிமுகவும் சில சமூக ஆர்வலர்களும் திரட்டி வைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தொடர் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும். அது திமுகவின் அடிமட்டம் வரை ஆட்டம் காண வைக்க வேண்டும். தேர்தல் செலவுகளுக்காக பல இடங்களில் திமுக புள்ளிகள் பதுக்கி வைத்துள்ள பணமெல்லாம் ஐடி ரெய்டுகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டால் தான் தேர்தல் நேரத்தில் திமுகவின் செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைக்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் வாய்ப்பை விட்டுவிட்டால் பின் திமுகவுக்கு தேர்தல் எளிதாகிவிடும்; நமது வெற்றி என்பது கனவாகிவிடும் என எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமைக்கு அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது பீகார் தேர்தலில் பிஸியாக இருக்கும் பாஜக தலைமைகளுக்கு இந்த மெசேஜ் கிடைக்கப்பெற, “பீகார் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் முழுக்கவனம் செலுத்தப்படும்; அதையடுத்து ஒவ்வொரு அமைச்சர்களாக கட்டம் கட்டப்படுவார்கள். அடுத்த மாதம் முதல் பாஜகவின் பெரும்புள்ளிகள் தமிழ்நாட்டில் களமிறங்குவர். அதனால் கவலைப்படாமல் தேர்தல் வேலைகளை தொடர்ந்து பாருங்கள்” என நம்பிக்கையூட்டும் பதில்களை சொல்லியனுப்பியிருக்கும் பாஜக தலைகள், “கூட்டணியை வலுப்படுத்துங்கள்” எனவும் ‘உச்’சுக்கொட்டி இருக்கிறது. எப்படியோ திமுகவை ஆட்டம் காண செய்வதற்கான உத்திரவாதம் கிடைத்ததால் கொஞ்சம் கூலாகி இருக்கிறார் எடப்பாடியார் என்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்.
பாஜக தலைகள் கொடுத்த உத்திரவாதத்தை, பாஜக & அமலாக்காத்துறைக்கு நெருக்கமான சில மூத்த பத்திரிகையாளர்களும் கூட தகவல்களாக முன்வைக்கின்றனர். திமுகவின் 13 அமைச்சர்கள் லிஸ்ட் அமித்ஷாவின் பார்வையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், பூவா தலையா போட்டு எஞ்சிய அமைச்சர்களில் யாரிடமிருந்து அமலாக்காத்துறையின் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பமாகுமோ தெரியவில்லை. ஆனால், டிசம்பர் முதல் ரெய்டுகளுக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் புரிகிறது. பார்ப்போம்…
