‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்” எனும் பெயரில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தொகுதிகளில் ஒரு விரிவான சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறாராம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியாரின் திடீர் உத்தரவின் பின்னணியை இங்கு பார்க்கலாம்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுமைக்குமான தேர்தல் பிரச்சாரத்தை ‘மக்களைக் காப்போம்; தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் துவக்கி தற்போது வரை 173 தொகுதிகளில் முடித்துள்ளார். இந்த தொகுதிகளில் மக்கள் சந்திப்பு, விவசாயிகள் சந்திப்பு, நெசவாளர்கள் உடனான சந்திப்பு, மீனவர்களுடன் சந்திப்பு என பல்வேறு வகையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இத்தகைய சந்திப்புகளும், மழையில் நெல்மணிகளை பறிகொடுத்த விவசாயிகளை களத்தில் இறங்கி சந்தித்து ஆறுதல் அளித்தது உள்ளிட்ட செயல்பாடுகளால் அவர்களது ஆதரவை பெற்று வருகிறார். மேலும், இதுவரை மேற்கொண்ட பிரச்சாரத்தில் வாக்குறுதிகளாக அவர் அறிவித்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500, பொங்கலுக்கு மீண்டும் ரூ.2,500, தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுச்சேலை உள்ளிட்ட சில வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும் அவற்றின் அளவீடு என்ன? என்பதை அறிய நினைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் வியூகம் அமைக்கும் நிறுவனத்தின் உதவியோடு பிரச்ச்சாரம் செய்துள்ள 173 தொகுதிகளிலும் ஒரு சர்வே எடுப்பதற்கான அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார். இந்த சர்வேயில் திமுக மீதான அதிருப்தி எப்படி இருக்கிறது? அதிமுகவுக்கான செல்வாக்கு எப்படி உள்ளது? பாஜகவுடனான கூட்டணியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு? தவெக உடனான கூட்டணியை விரும்புகிறார்களா? வேறு யாருடன் கூட்டணி வைக்க மக்கள் விரும்புகிறார்கள்? இதுவரை அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? செங்கோட்டையன் போன்றோர் கொடுக்கும் குடைச்சல்கள் களத்தில் பிரதிபலிக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மக்களிடம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 10,000 பேரிடம் அவர்களது கருத்துக்களை கேட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வே முடிவின் அடிப்படையில் அடுத்தகட்டமாக காய்களை நகர்த்தலாம் என முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. இப்போதைக்கு சென்னையில் இந்த சர்வே பணிகள் தொடங்கப்படுவதாக தகவல். தற்போதைக்கு பள்ளியில் பருவத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருப்பவராக இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் என்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்.
