“பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை, பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்றின் மீது மீண்டும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்சில், வணிக ரீதியாக உண்ணக்கூடிய உணவை வீணாக்குவது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு உணவுகளைக் குப்பையில் கொட்டினால், அவர்களுக்கு 75,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம் ரூபாய்) வரை அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இத்தகைய உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்குவது அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மீதமாகும் உணவுகளைக் கட்டாயமாகத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்க வேண்டும் என்பது விதியாகும். உலகிலேயே இத்தகைய சட்டத்தைக் கொண்டுவந்த முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டத்தின்படி, 400 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், விற்பனையாகாத மற்றும் உண்ணக்கூடிய உணவுகளைக் குப்பையில் கொட்டத் தடை விதிக்கப்பட்டது. மாறாக, அத்தகைய கூடுதல் உணவுகளைத் தொண்டு நிறுவனங்களுக்கும் உணவு வங்கிகளுக்கும் தானமாக வழங்குவதைப் பெரிய வணிக நிறுவனங்கள் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.”

இந்தியாவில் இதே போன்ற சட்டம் உள்ளதா? “இந்தியாவைப் பொறுத்தவரை, உணவை வீணாக்குவதற்கு எதிராக தற்போது நேரடிச் சட்டங்கள் ஏதுமில்லை. குறிப்பாக, உபரி உணவைத் தூக்கி எறிவதற்காக மட்டும் அபராதம் விதிக்கும் தேசிய அளவிலான சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், உணவு விரயத்தைக் குறைக்க ஒழுங்குமுறை மற்றும் விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), ‘இந்திய உணவுப் பகிர்வு கூட்டணி’ (IFSA) போன்ற முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு, உபரி உணவை மீட்பு நிறுவனங்களுடன் வணிக நிறுவனங்களையும், விழா ஏற்பாட்டாளர்களையும் இணைத்து, பசியால் வாடுவோருக்கு அந்த உணவை முறையாகக் கொண்டு சேர்க்க உதவுகிறது.

இந்தியாவில் நடைமுறையிலுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம்’, முதன்மையாக உணவின் தரத்தை உறுதி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பற்ற அல்லது தரம் குறைந்த உணவை விற்பனை செய்தால், 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான சட்ட அமலாக்கத்தில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிரான்ஸ் நாட்டில், சூப்பர் மார்க்கெட்டுகள் உண்ணக்கூடிய மீதமுள்ள உணவுகளைத் தானமாக வழங்க வேண்டும் என்பது சட்டப்பூர்வக் கடமையாகும்; விதியை மீறினால் தண்டனை உண்டு. ஆனால், இந்தியாவில் இத்தகைய நடைமுறை பெரும்பாலும் தன்னார்வ அடிப்படையிலேயே (Voluntary) நடைபெறுகிறது மற்றும் விழிப்புணர்வு சார்ந்ததாகவே உள்ளது.”

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version