சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, கடந்த ஜன. 21ம் தேதி திமுகவில் இணைந்தார்.
முன்னதாக, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் திமுகவிலும் ஜே.சி.டி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ஓபிஎஸ் காலதாமதப்படுத்துவதால், அவரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் திமுக-அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை மவுனமாக இருந்த பிரேமலதாவும், நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைவிட்டார்.
மறுபுறம் தனிமரமாக இருக்கும் ஓ.பி.எஸ்., என்.டி.ஏ. கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். பிரேமலதாவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

