தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிக்கப்பட்டது என்றும் எந்த கட்சியுடனும் இன்றைய நிலையில் கூட்டணி இல்லை என்றும் எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்
ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நல்ல நெருக்கத்துடன் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை, சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தர்மயுத்தம் தொடங்கிய ஓ பன்னீர்செல்வம், கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இடம் பெற்ற ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
இருப்பினும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த ஓபிஎஸ்-ற்கு சமீப கால நிகழ்வுகள் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ஒ.பி.எஸ்.ஸை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்தும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்று இருந்தது ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தனது உரிமையை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது.
ஓ பன்னீர்செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
எந்த கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி என்பதை இன்னும் சிறிது காலம் கழித்து அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதற்க்கான காரணம் உலகம் அறிந்ததே அதை எடுத்துக்கூற வேண்டிய அவசியம் இல்லை.
2026 இல் சரியான கூட்டணி சரியான திசையில் வழிநடத்திச் செல்ல உள்ள கூட்டணி எதிர்காலத்தில் அமையும். அதைப் பொறுத்து எங்களின் முடிவு இருக்கும். நிர்வாகிகளின் முடிவு ஒருமித்த முடிவாக இருந்தது. யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள் அல்ல யாரையும் வாழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள். பிஜேபி எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அது நாடே அறியும்.
ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்னையில் நான் நடைபயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று நடை பயணம் சென்றபோது முதல்வரையும் அங்கு சந்தித்தேன். வணக்கம் கூறிவிட்டு சென்றேன் என்றார்.