பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணியே நீடிப்பார் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் காந்திமதி நியமனத்திற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முனைவர் சௌமியா அன்புமணி 2004-ஆம் ஆண்டு முதல் பசுமைத் தாயகம் தலைவராக இருக்கிறார். அதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு முதலே பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
2002- ஐநா புவி உச்சிமாநாடு தொடங்கி, 2009 ஐநா கோபன்ஹெகன் காலநிலை மாநாடு என ஏராளமான சர்வதேச சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். இன்று பரபரப்பாக பேசப்படும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காக்க 2003-ஆம் ஆண்டிலேயே ஆவணப்படம் வெளியிட்டவர் அவர். தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விக்கு வழிவகுத்த ‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’ எனும் மாநாட்டை பசுமைத் தாயகம் சார்பில் நடத்தியவர் அவர்தான்.
தமிழ் நாடெங்கும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுவளர்த்தவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆவார். நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு கல்லூரிகளில் நடத்தி தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவை வளர்த்தவர்களில் அவர் முக்கியமானவர். இருபது ஆண்டுகாலமாக அவர் நடத்திவரும் பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் தலையங்க கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது
“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே” அதாவது. ‘மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது சிறகை விரித்து ஆட முயன்றது’ போன்று, சுற்றுச்சூழல் அரசியல் குறித்து எள்முனையளவு கூட ஏதும் அறியாத யாரோ ஒருவரைக் காட்டி, பூசாரிகள் சில திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அவை வெறும் கேலிக்கூத்துகள் தவிர வேறெதுவும் இல்லை.
முதலில் பசுமைத் தாயகம் ஒரு அரசு சாராத தொண்டு அமைப்பு. அது அரசியல் கட்சியிம் துணை அமைப்பு இல்லை. அரசியல் கட்சிக் கூட்டங்களில் பசுமைத் தாயகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது. பசுமைத் தாயகத்தின் தலைவரை யாரும் நீக்கவும் சட்டத்தில் இடமில்லை. பசுமைத் தாயகத்தின் தலைவர் தாமாக பதவி விலகினால் தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பசுமைத் தாயகத்துக்கு புதிய தலைவரை நியமிப்பதாக அறிவிப்பதெல்லம் வெறும் வெட்டி அறிவிப்புகள் தவிர வேறெதுவும் இல்லை.
எனவே, பசுமைத் தாயகம் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி நீடிக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ‘எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாமல்’ பேசுகிற பூசாரிகள் கும்பல் – தேர்தல் அறிவிக்கப்படும் வரை இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் நம் நேரத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான நமது பணிகளில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் பொதுக் குழு கூட்டத்தில் பசுமைத் தாயகத்தின் தலைவர் பதவியிலிருந்து சவுமியா அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக மகள் ஸ்ரீகாந்திமதியை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளார். மேலும் பசுமைத் தாயகம் என்ற பெயரை சவுமியா பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
ஏற்கெனவே பாமகவில் நிர்வாகிகளை நீக்குவதும் பதிலுக்கு நியமிப்பதும் என அன்புமணி தரப்பும் ராமதாஸ் தரப்பும் செய்து வந்த நிலையில் தற்போது பசுமைத் தாயகத்திலும் இது போன்று ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
