ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் குற்ற வழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியான ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் மற்றும் சென்னிமலை மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.சதீஷ் ஆகியோர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்கள் மீதான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் படிவம் 26-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், கிருத்திகா சிவகுமார் தாக்கல் செய்துள்ள சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் 4 மற்றும் 5-வது பக்கங்களில் தன் மீது எந்தக் குற்றவியல் வழக்கும் இல்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 06-07-2025 அன்று அவர் மீது குற்ற எண்: 371/2025-ன் கீழ் பி.என்.எஸ் பிரிவு 318(4) மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருத்திகா சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் ‘இந்தியன் பப்ளிக் பள்ளி’ எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கியது தொடர்பாகவும், பெற்றோர்களை ஏமாற்றி போலி மாற்றுச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாகவும் இந்த வழக்கு பதிவாகியுள்ளது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தந்து, திட்டமிட்டு குற்ற வழக்குகளை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ள கிருத்திகா சிவகுமாரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 125A-ன் படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
