மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, வசனங்களையோ எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியினரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதி பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகர தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்தககொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் வியுகம் அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், “எப்படி எல்லாம் ஜெயிக்க வேண்டும் எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். தற்போது கட்சி வளர்ச்சியை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூர் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேமுதிகவின் நிறுவனர் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, அவரது பாடல்களையோ எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக தெரிவித்தார். விஜயகாந்த் புகைப்படத்தை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தியதாக புகார் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் விளக்கமளித்தார். அதேநேரம், கூட்டணியில்
வரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம் எனவும், தனிப்பட்ட முறையில் கேப்டன் விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும், ஆணவ படுகொலைகள், லாக்கப் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply

Exit mobile version