திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ சண்முகவே கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை – மகன் சரணடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரனுக்கு சொந்தமான குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னையை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இந்த தாக்குதலில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகியோர் எஸ்.பி அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.