போதைப் பொருள்கள் அதிகம் விற்கும் பகுதியில் இருக்கும் காவல்நிலைய அதிகாரிகளையும் அரசு தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதும் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.

 திருத்தணி ரயில் நிலையம் அருகே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற 30 வயது இளைஞர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். திருவாலங்காடு – திருத்தணி மின்சார ரயிலில் அவர் பயணித்த போது, அவருடன் பயணித்த வாலிபர் ஒருவரை 17 வயதுடைய சிறுவர்கள் சிலர் அரிவாளை காட்டி மிரட்டுவது போல வீடியோ எடுத்துள்ளனர். அதனைத் தடுத்த வடமாநில இளைஞரையும் அரிவாளால் வெட்டியதுடன், அதனை வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ஆக வெளியிட்டுள்ளனர். 17 வயதுடைய சிறுவர்கள் பிறரை அரிவாளால் வெட்டுவதும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதற்குமான தைரியம் எங்கிருந்து வந்தது?

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விருத்தாச்சலத்தில் 3 இளைஞர்கள் ஒரு வாலிபரை முட்டி போட வைத்து, இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி,  கத்தியை கழுத்தில் வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிறரை தாக்குவதற்கான மனநிலை உருவாவதே தவறானது. ஆனால் இன்றைய இளைஞர்கள் பிறரை தாக்குவது, வெட்டுவது, குத்துவது மட்டுமல்லாமல், அவற்றை வீடியோ எடுத்து சமூக வளைத்தலங்களிலும் பரப்புகின்ற ஆபத்தான செயலையும் அச்சமில்லாமல் செய்கின்றனர். இதற்கு காரணம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கம்தான். போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் இவ்வாறு சீரழிவது, வன்முறையை கையில் எடுப்பது, அவற்றை வெளிப்படுத்துவது என்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.

போதைக்கு அடிமையாவது தனிநபரை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும். 1985 போதைப்பொருள் தடுப்புச் சட்டப்படி போதைப் பொருட்கள் தயாரித்தல், கடத்துதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்றவை குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். சட்டப்பிரிவு 31-ஏவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க கூட வழிவகை உள்ளது.

சட்டத்தில் இவ்வாறு தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் இருந்தாலும் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் கஞ்சா பயன்படுத்துவோர்,  விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவது தினந்தோறும் வழக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அத்தகையவர்களை கைது செய்யும் காவல்துறையினர் ஒப்புக்காக, உடனடி பிணையில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்கு போடுகின்றனர். ஆனால்,  எங்கிருந்து, எவர் மூலம் கொண்டுவரப்படுகிறது, எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என கண்டறியும் தொடர் சங்கிலி நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை.  இதனால் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றாக தடுக்க முடியவில்லை.

தமிழ்நாடெங்கும் நிறைந்திருக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள்  பள்ளி கல்லூரி பருவத்தினர் முதற்கொண்டு முதியவர்கள் வரை வயது வரம்பின்றி பலரையும் போதைக்கு அடிமையாக்கி, அரக்கர்களாக மாற்றுகிறது. பள்ளி கல்லூரிகள் மிகஅருகாமையில் கூட கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

மனித மிருகங்களாக மாறிப்போன போதை ஆசாமிகளால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள்,  வேலைக்கு செல்லும் பெண்கள், கடைத் தெருவுக்கு செல்லும் தாய்மார்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்கிற அச்ச உணர்வு மக்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே தமிழக அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக  தண்டனைகளைக் கடுமையாக்குவதுடன், ஆபத்தான போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version