இலங்கையில் ஒற்றை ஆட்சியை  ஏற்படுத்தும்   சிங்கள சதியை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வரும் இலங்கை ஆட்சியாளர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோருதல் & தொடர்பாக

உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்காமல் செய்யப்படும் முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து 1948&ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த நாள் முதலாகவே இனம் மற்றும் மொழி அடிப்படையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை விடுதலை அடைந்த போது அந்த நாட்டின் குடிமைப்பணி அதிகாரிகளில் 30%க்கும் கூடுதலானோர் தமிழர்களாக இருந்தனர். ஆனால், 1956&ஆம் ஆண்டில் சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி (Sinhala Only Act)என்ற சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சிங்களம் தெரியாத தமிழர்கள் இலங்கையின் குடிமைப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இப்படியாக தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் இனவாத நடவடிக்கைகளின் காரணமாக தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டனர். அதற்கு எதிராகத் தான் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இனக்குழுக்கள் தனித் தமிழீழம் என்ற முழக்கத்துடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1980&களில் இந்தப் போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது தான் இந்தியா தலையிட்டு சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 1987&ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29&ஆம் தேதி  செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் இராஜிவ்காந்தி அவர்களும், இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையே  தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்துவது தான். தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய ஆட்சியை  உருவாக்கி, அதன் மூலம் தமிழர்கள் அவர்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள இந்திய & இலங்கை ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு இலங்கை அரசு இன்று வரை அனுமதிக்கவில்லை.

இந்திய&இலங்கை ஒப்பந்தத்திற்கு செயல்வடிவம் அளிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 13&ஆம் அரசியல் சட்டத்திருத்தம், ஒப்பந்தத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, தமிழர்களை நான்காம் தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்தது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட மாகாண அரசுகளுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. பொம்மையாகவாவது இருந்து வந்த மாகாண அரசுகளும் கூட 2018&ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக இல்லாத காரணங்களைக் கூறி மாகாண தேர்தல்களை நடத்த சிங்கள அரசு மறுத்து வருகிறது.

இலங்கையில் உள்ள 9 மாகாண அவைகளுக்கும்  தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்திய அரசும் அதன் பங்குக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு கால கட்டங்களில் இலங்கைக்கு தாங்கள் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போதும், இலங்கை அதிபர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதும் இலங்கையில் உள்ள தமிழர்கள் கண்ணியம், சமத்துவம், நீதி  ஆகியவற்றுடன் வாழ வகை செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். தங்களுக்கு அடுத்த நிலையிலான இரு தரப்பு பேச்சுகளின் போதும் இதே தீர்வு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் இன்று வரை மேற்கொள்ளவில்லை.

இப்போது அதையும் கடந்து இலங்கையில் ஒற்றை ஆட்சி முறையை (Unitary Government System) உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அந்நாட்டு  அரசு ஈடுபட்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இனி எந்தக் காலத்திலும் அரசியல் அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்கவே கிடைக்காது. இலங்கை அரசின் இந்த முயற்சி தவறானதும், ஆபத்தானதும் ஆகும்.

இலங்கை இனச்சிக்கலுக்கு காரணமே அங்குள்ள தேசிய இனமான தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படாமல் அடக்கி ஆளப்பட்டது தான். ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையையும் அடக்கி ஆண்ட சமூகமான தமிழர்கள், தாங்கள் அடக்கி ஆளப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் விடுதலைப் போரை தொடங்கினார்கள். உலக நாடுகளின் துணையுடன் நயவஞ்சகமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை  வீழ்த்தி விட்டதாக நினைத்துக் கொண்டு தான் சிங்கள ஆட்சியாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாவிட்டாலும், தமிழீழ விடுதலைப் போருக்கான காரணங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலும், எந்தக் காலத்திலும்  அதிகாரம் அளிக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டால், அது ஒவ்வொரு ஈழத்தமிழரின் மனதிலும் உறங்கிக் கொண்டிருக்கும் ஈழ விடுதலைப் போர் உணர்வுகளை  தூண்டி விட்டு விடும். அது இலங்கையின் எதிர்காலத்திற்கு எல்லா வழிகளிலும் பாதகமானதாகவே அமையும். இதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

இலங்கையில் அனுரா திசநாயக தலைமையிலான அரசு, தமிழர்களுக்கு எதிராகவும், ஆபத்தான பாதையிலும் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய  அரசுக்கு உண்டு. ஏனெனில், இந்தியா& இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தது இந்திய அரசு தான். அதுமட்டுமின்றி, இயற்கை சீற்றம், நிதி நெருக்கடி என இலங்கை அரசு ஒவ்வொரு முறை சிக்கலில் சிக்கிக் கொள்ளும் போதும் அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி காப்பாற்றுவது இந்திய அரசு தான். அந்த வகையில் இலங்கையில் கண்ணியத்துடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழும் உரிமை சிங்கள ஆட்சியாளர்களால் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ற பெயரில் பறிக்கப்படுவதை இந்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

இலங்கையில் இன்றைய சூழலில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தனித்துவமான இறையாண்மையுடன்  கூடிய, சுய நிர்ணய உரிமை கொண்ட கூட்டாட்சி முறை தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். எனவே, இலங்கையில் ஒற்றை ஆட்சி முறையை ஏற்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளும் சிங்கள ஆட்சியாளர்களின் முயற்சியை தங்களின் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம்  வழங்கும் கூட்டாட்சி முறையை ஏற்படுத்தும் வகையில் அந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்யும்படி சிங்கள ஆட்சியாளர்களுக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version