வரும் பொங்கலுக்குள் 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் MRB செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக உடனடியாக தலையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், MRB நர்ஸ்களுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், பணி மாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியீட்டு விழா
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பொது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில் குமார் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் 15,645 செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, இன்றயை தினம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என்பது செய்யப்பட்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து 4825 செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறார்கள். மீதம் இருக்கிற 8,000 க்கும் மேற்பட்ட எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. வருகின்ற பொங்கலுக்கு முன்பாக ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது.
அதில் இன்று 169 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மருத்துவ கட்டமைப்புக்கு உருவாகக்கூடிய பணியிடங்கள் அரசின் சார்பில் சொன்னது போல் பொங்கலுக்கு முன்னாள் மீதமுள்ள 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், MRB செவிலியர்கள் முறை என்பது 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 1871 பணியிடங்கள் மட்டுமே அதிமுக ஆட்சி காலத்தில் பணி நிரப்பப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 4825 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது மேலும் ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படும் எனவும் அதில் முதல் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
724 செவிலியர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றினார்கள் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்க்க வேண்டும் என கூறினர். கொரோனா காலத்தில் 2144 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என்றாலும் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்றயை தினம் 15,645 செவிலியர்களுக்கு பணி மூப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
