தவெகவை அரசியல் கட்சியாகவே தான் பார்க்கவில்லை, தேர்தலுக்கு பிறகு அக்கட்சி இருக்குமா, இருக்காதா எனத் தெரியாது என்று பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம்? என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்” என்றார்.

தமிழகத்தில் வன்கொடுமை தொடர்பான புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. மதக் கலவரமாக இருந்தால் தடுக்கலாம். போட்டி, பொறாமை போன்ற கொலை வழக்குகள் காவல் துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் போதையால் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. போதை கலாச்சாரம் தற்போது அதிகமாக உள்ளது” என்றார்.

நூறு நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையும் வரவேற்பதில்லை. நல்ல திட்டமாக இருந்தால் அவர்களுடைய பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பாதகமாக இருந்தால் குறை சொல்கின்றனர்” என்றார்.

விஜய் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் தேர்தலில் போட்டி போட வேண்டும். என்ன நிலைபாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். தவெக-வை அரசியல் கட்சியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு தான் நிலைபாடு தெரியும். அதன்பின்பு கட்சி இருக்குமா? இல்லையா? என்று தெரியும்.

தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விஜய் கார் முன்னால் நின்றுள்ளார். அவரை ஒரு பெண்ணாக, மனிதாபிமானம் அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி என்ன குறை? என்று கேட்டிருக்கலாம். அது தான் கதாநாயகன், தலைவனாக இருக்க முடியும். ஆனால் அவர் அதனை அன்று செய்யாமல் இருந்ததால் தர்ணா போராட்டம், மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் என்ன என்று கேட்டிருந்தால் இந்த பிரச்னையை இருந்திருக்காது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version